
தமிழகத்தில் தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம்? கல்வித்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் முக்கிய உத்தரவு
செய்தி முன்னோட்டம்
தமிழ்நாட்டில் உள்ள தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம் வழங்குவது மற்றும் ஆரம்பப் பள்ளிகளை நடுநிலைப் பள்ளிகளாகத் தரம் உயர்த்துவது தொடர்பாக, தமிழக கல்வித்துறை செயலாளர் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முன்னதாக, இது தொடர்பாக அகில இந்திய தனியார் கல்வி நிறுவன சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் பழனியப்பன், உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு, நீதிபதி ஜிகே இளந்திரையன் முன் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பு வழக்கறிஞர், "தற்போது தற்காலிக அங்கீகாரம் மட்டுமே தனியார் பள்ளிகளுக்கு வழங்கப்படுகிறது. நிரந்தர அங்கீகாரம் வழங்கக் கோரி தனியார் பள்ளிகள் இயக்குநர் அளித்த பரிந்துரைகள் இதுவரை பரிசீலிக்கப்படவில்லை." என்றார்.
கல்வி உரிமைச் சட்டம்
கல்வி உரிமைச் சட்டத்தில் சிரமங்கள்
மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் மேலும், கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் ஐந்தாம் வகுப்பு முடித்த ஏழை மாணவர்கள், வேறு பள்ளிகளுக்குச் செல்வதில் சிரமங்கள் இருப்பதால், ஆரம்பப் பள்ளிகளை நடுநிலைப் பள்ளிகளாகத் தரம் உயர்த்தவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது என வாதிட்டார். அரசு தரப்பு வழக்கறிஞர், "பரிந்துரைகள் பல்வேறு நிபந்தனைகளுடன் அளிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு பள்ளியின் நிலையை ஆய்வு செய்த பின்னரே இதுகுறித்து முடிவெடுக்கப்படும்" என்றார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, நிரந்தர அங்கீகாரம் மற்றும் பள்ளிகளைத் தரம் உயர்த்துவது குறித்த பரிந்துரைகள் மீது 12 வாரங்களுக்குள் தகுந்த உத்தரவுகளைப் பிறப்பிக்குமாறு கல்வித்துறை செயலாளருக்கு உத்தரவிட்டார்.