தமிழக அரசியலில் நள்ளிரவு பரபரப்பு: விஜய்க்கு செக் வைத்த விசிக, காவல்துறையை அணுகிய AMMK- அடுத்து நடப்பது என்ன?
செய்தி முன்னோட்டம்
தமிழகச் சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்கு பிந்தைய அரசியல் களம், வெள்ளிக்கிழமை அன்று திகைப்பூட்டும் திருப்பங்களைக் கண்டது. ஆட்சி அமைக்கத் தேவையான 118 என்ற மேஜிக் எண்ணை நெருங்கியும், இறுதி நேரத்தில் கூட்டணிக் கட்சிகளின் ஊசலாட்டம் மற்றும் இழுபறியால் தவெக தலைவர் விஜய் முதலமைச்சராகப் பதவியேற்பதில் மீண்டும் சிக்கல் நீடிக்கிறது. காங்கிரஸ் மற்றும் இடதுசாரி கட்சிகளின் ஆதரவைப் பெற்றும், பெரும்பான்மையை நிரூபிக்கத் தேவையான கடைசி இரண்டு இடங்களுக்காக நள்ளிரவு வரை தீவிரப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன. இந்த நிலையில் TVK தனது கட்சி MLA வை வைத்து ஃபோர்ஜ்ரி செய்ததாக AMMK தலைவர் TTV தினகரன் காவல்துறையை அணுகியுள்ளார்.
மர்மம்
மெஜாரிட்டி எண்ணிக்கையில் நீடிக்கும் மர்மம்
நேற்றிரவு, தவெக (107), காங்கிரஸ் (5), சிபிஐ (2) மற்றும் சிபிஎம் (2) என மொத்தம் 116 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவுக் கடிதங்களுடன் விஜய் ஆளுநரைச் சந்தித்தார். இருப்பினும், பெரும்பான்மைக்கு இன்னும் இரண்டு இடங்கள் குறைவாக இருப்பதால், ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் பதவியேற்பு விழா குறித்த அறிவிப்பை வெளியிடவில்லை. இதற்கிடையே, தவெக-விற்கு ஆதரவு அளிப்பதாகக் கருதப்பட்ட ஐயுஎம்எல் (IUML), தாங்கள் திமுக கூட்டணியிலேயே நீடிப்பதாக அறிவித்தது விஜய்யின் கணக்குகளை மாற்றியமைத்துள்ளது. அதேபோல் VCK அளிப்பதாக கூறிய ஆதரவு கடிதமும் ஆளுநர் கைக்கு கிடைக்கவில்லை என்பதால் விஜய் மெஜாரிட்டியை பெற தவறினார். அதனால் ஆளுநர் அவரை ஆட்சியமைக்க அழைக்கவில்லை.
விசிக
விசிக-வின் துணை முதல்வர் நிபந்தனை
ஆட்சி அமைக்கத் தேவையான அந்த இரண்டு இடங்களைக் கொண்டுள்ள விசிக (VCK), ஆதரவு அளிக்கப் பெரும் நிபந்தனைகளை விதித்துள்ளதாகத் தெரிகிறது. அக்கட்சியின் தலைவர் திருமாவளவனுக்கு 'துணை முதலமைச்சர்' பதவி வழங்கப்பட வேண்டும் என்று விசிக தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், தவெக தரப்பு 'நகர்ப்புற நிர்வாகத் துறையை' மட்டுமே வழங்க முன்வந்துள்ளதால், இரு தரப்புக்கும் இடையே முட்டுக்கட்டை ஏற்பட்டுள்ளது. இது குறித்த இறுதி முடிவைச் சனிக்கிழமை காலை திருமாவளவன் அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
'ரிசார்ட்' அரசியல்
மீண்டும் தொடங்கிய 'ரிசார்ட்' அரசியல்
மாநிலத்தில் குதிரை பேரம் நடப்பதைத் தவிர்க்க, காங்கிரஸ் கட்சியின் 4 எம்.எல்.ஏ-க்கள் ஹைதராபாத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. அதேபோல், மன்னார்குடி தொகுதி அமமுக எம்.எல்.ஏ காமராஜ் மாயமானதாக டிடிவி தினகரன் புகார் தெரிவித்துள்ளார். அதற்கு முன்னதாக, எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆட்சி அமைக்க வாய்ப்பு வழங்க வேண்டும் என டிடிவி தினகரன் ஆளுநரிடம் கோரிக்கை விடுத்தார். இந்த புகாரை அடுத்து, AMMK MLA மனமுவந்து ஆதரவு கடிதத்தில் கையெழுத்திட்ட வீடியோவை தவெக தரப்பு நள்ளிரவு வெளியிட்டது. மறுபுறம் TTV தினகரன் விஜய் மீது புகார் அளிக்க DGP அலுவலகம் சென்றார்.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
TVK rejects 'Forgery' charges by AMMK, releases video of Kamaraj signing letter - WATCH
— TIMES NOW (@TimesNow) May 9, 2026
TVK: Kamaraj signed support letter pic.twitter.com/mqSYx2tbQs
அடுத்தகட்ட நகர்வு
ஆளுநரின் அடுத்தகட்ட நகர்வு
மூன்று நாட்களில் மூன்றாவது முறையாக விஜய்யைச் சந்தித்த ஆளுநர், ஆதரவு எம்.எல்.ஏ-க்களின் முறையான கையொப்பங்கள் இருந்தால் மட்டுமே அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்க முடியும் என்பதில் உறுதியாக உள்ளார். குறிப்பாக விசிக-வின் இரண்டு எம்.எல்.ஏ-க்களின் கையொப்பத்திற்காக ஆளுநர் மாளிகை காத்திருக்கிறது. திமுக மற்றும் அதிமுக இணைந்து ஆட்சி அமைப்பதைத் தடுக்கவே தாங்கள் விஜய்க்கு ஆதரவு அளிப்பதாக இடதுசாரித் தலைவர்கள் விளக்கியுள்ளனர். இந்த அரசியல் சதுரங்கத்தில் யார் வெற்றி பெறுவார்கள் என்பது இன்று தெரிந்துவிடும்.