Loading...
100 நாட்களில் ரூ.1.02 லட்சம் கோடி! சென்னையில் பிரம்மாண்டமாகத் தொடங்கிய முதலீட்டாளர்கள் மாநாடு; முதல்வர் விஜய் துவக்கி வைப்பு
முதல்வர் விஜய்

100 நாட்களில் ரூ.1.02 லட்சம் கோடி! சென்னையில் பிரம்மாண்டமாகத் தொடங்கிய முதலீட்டாளர்கள் மாநாடு; முதல்வர் விஜய் துவக்கி வைப்பு

எழுதியவர் Sekar Chinnappan
Aug 13, 2026
11:53 am

செய்தி முன்னோட்டம்

சென்னையில் உள்ள தனியார் ஹோட்டலில் வெற்றி தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாடு பிரம்மாண்டமாகத் தொடங்கியது. தவெக ஆட்சி அமைந்த பிறகு நடைபெறும் முதல் முதலீட்டாளர்கள் மாநாடு என்பதால், தொழில்துறையினர் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவியது. இன்று (ஆகஸ்ட் 13) காலை 11 மணிக்கு இந்த மாநாட்டை முதலமைச்சர் விஜய் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கி வைத்தார். அண்டை மாநிலங்களுக்கு முதலீடுகள் செல்வதாக எழுந்த விமர்சனங்களுக்குப் பதிலளிக்கும் வகையில் இந்த மாநாடு மிக முக்கியத்துவத்துடன் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது.

முதலீடுகள்

100 நாட்களில் ரூ.1.02 லட்சம் கோடி முதலீடுகள் ஈர்ப்பு

தவெக ஆட்சி அமைந்து 100 நாட்கள் நிறைவடைந்துள்ள நிலையில், இம்மாநாட்டில் ஈர்க்கப்பட்டுள்ள மொத்த முதலீடுகள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியிடப்பட்டன.

அதன்படி, ஆட்சிப் பொறுப்பேற்ற 100 நாட்களுக்குள் மொத்தமாக ரூ.1,02,514 கோடி அளவிலான முதலீடுகள் ஈர்க்கப்பட்டு, 104 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலமாக மாநிலம் முழுவதும் சுமார் 1,21,788 புதிய வேலைவாய்ப்புகள் நேரடியாகவும் மறைமுகமாகவும் உருவாக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒப்பந்தங்கள்

மாநாட்டில் கையெழுத்தான புதிய புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்

இன்றைய முதலீட்டாளர்கள் மாநாட்டின் மூலம் மட்டும் தனியாக ரூ.67,452 கோடி மதிப்பிலான புதிய முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளதாக மாநாட்டில் அறிவிக்கப்பட்டது.

இதற்காக 97 முக்கிய நிறுவனங்களுடன் புதிய புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன.

இந்த ஒப்பந்தங்களின் மூலம் மட்டும் மாநிலத்தில் சுமார் 1,06,998 பேருக்குப் புதிய வேலைவாய்ப்புகள் கிடைக்கப்பெறும் என்றும், இது தொழில்துறை வளர்ச்சிக்கு மிகப்பெரிய ஊக்கமளிக்கும் என்றும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

அரசு விளக்கம்

தொழில் துறையினரின் எதிர்பார்ப்புகளும் அரசு விளக்கமும்

முன்னதாக, இம்மாநாடு குறித்தான முறையான அறிவிப்புகள் முன்கூட்டியே வெளியிடப்படவில்லை என தொழில் துறையினர் சிலர் விமர்சனங்களை முன்வைத்திருந்தனர்.

எனினும், அனைத்துத் தரப்பு முதலீட்டாளர்களையும் ஒருங்கிணைத்து விரைவாகத் தொழில் திட்டங்களைத் தொடங்குவதற்காகவே இந்த மாநாடு நடத்தப்பட்டுள்ளதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

ஓசூர் விமான நிலையத் திட்டம் மற்றும் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதன் மூலம் மேலும் பல புதிய முதலீடுகள் வரும் நாட்களில் ஈர்க்கப்படும் எனத் தொழில்துறை சார்பில் நம்பிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT