அண்டை மாநிலங்களுக்கு கனிம வளங்களை கொண்டு செல்ல 3 மாதங்கள் தற்காலிக தடை: தமிழக அரசு
செய்தி முன்னோட்டம்
தமிழ்நாட்டிலிருந்து அண்டை மாநிலங்களுக்குக் கற்கள், ஜல்லி மற்றும் எம்-சாண்ட் உள்ளிட்ட கனிமங்களைக் கொண்டு செல்ல 3 மாதங்களுக்குத் தற்காலிகமாக தடை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக, புவியியல் மற்றும் சுரங்கத்துறை இயக்குநர் டி. பிரபுசங்கர், அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களுக்கு அவசரச் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், தமிழ்நாட்டிலிருந்து பிற மாநிலங்களுக்குக் கற்கள், பாறாங்கற்கள், ஜல்லி, எம்-சாண்ட், சாலை கட்டுமானக் கற்கள் உள்ளிட்ட கனிமங்களை எடுத்துச் செல்ல உடனடியாக அமலுக்கு வரும் வகையில் 3 மாத காலத்திற்கு தற்காலிக தடை விதிக்கப்படுவதாக தெரிவித்துள்ளார்.
விலக்கு
புதுச்சேரி, காரைக்கால் மாவட்டங்களுக்கு விலக்கு
அண்டை மாநிலங்களுக்கு அதிகளவில் கனிம வளங்கள் கொண்டு செல்லப்படுவதால், தமிழ்நாட்டிற்குள் கட்டுமான பொருட்கள் தங்கு தடையின்றி கிடைப்பதை உறுதி செய்யவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதே வேளையில், ஒன்றிய பிரதேசங்களான புதுச்சேரி மற்றும் காரைக்கால் மாவட்டங்களுக்கு மட்டும் இந்த தடையிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக சுற்றறிக்கையில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
காரணங்கள்
தடை விதிக்கப்பட்டதற்கான முக்கிய காரணங்கள்
தமிழ்நாட்டில் உள்கட்டமைப்பு, வீட்டுவசதி மற்றும் தொழில் துறை வளர்ச்சிகள் வேகமாக நடைபெற்று வருவதால், கட்டுமானப் பொருட்களுக்கான தேவை கணிசமாக அதிகரித்துள்ளது.
கனிம வளங்கள் கன்னியாகுமரி, தென்காசி, தேனி, கோயம்புத்தூர், திருப்பூர் மற்றும் கிருஷ்ணகிரி போன்ற குறிப்பிட்ட சூழல் முக்கியத்துவம் வாய்ந்த மாவட்டங்களில் மட்டுமே அதிக அளவில் கிடைக்கின்றன.
தற்போது இயங்கி வரும் குவாரிகளின் உற்பத்தி, தமிழகத்தின் உள்நாட்டுத் தேவையைப் பூர்த்தி செய்யவே போதுமானதாக உள்ளது. இங்கிருந்து பிற மாநிலங்களுக்கு அதிகளவில் கட்டுமானப் பொருட்கள் அனுப்பப்படுவதால், தமிழகத்திற்குள் பற்றாக்குறை ஏற்பட்டு செயற்கையான விலையேற்றமும் தட்டுப்பாடும் உருவாகிறது.
தமிழகத்தின் உள்நாட்டுத் தேவையைப் பூர்த்தி செய்யவும், சுற்றுச்சூழலைப் பாதுகாக்கவும், சட்டவிரோதக் கனிமக் கடத்தலை முற்றிலுமாகத் தடுக்கவும் இந்தத் தற்காலிகத் தடை அமல்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.