மாநிலங்களின் கட்டுப்பாட்டில் மருத்துவக் கல்வி வேண்டும்: அமைச்சர் அருண்ராஜ் வலியுறுத்தல்
செய்தி முன்னோட்டம்
நீட் (NEET) மருத்துவ நுழைவுத் தேர்வுக்கு தமிழ்நாடு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், மருத்துவக் கல்வியை மாநில அரசுகளின் கட்டுப்பாட்டிலேயே கொண்டுவர வேண்டும் என்று தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் அருண்ராஜ் வலியுறுத்தியுள்ளார். பெங்களூருவில் நடைபெற்ற 'நியூஸ்18 ரைசிங் பாரத் சம்மிட்-தெற்கு பதிப்பு' நிகழ்வில் பேசிய அமைச்சர்,"இந்தியா ஒரு பரந்த கூட்டாட்சி நாடு. தேர்தல் காலத்திற்கு முன்பிருந்தே எங்கள் கட்சி தெளிவான ஒரு நிலைப்பாட்டைக் கொண்டுள்ளது. சுகாதார மற்றும் மருத்துவக் கல்வியை மாநிலங்களின் அதிகாரத்திற்குள் கொண்டுவர வேண்டும் என்பதே அது." நாடளாவிய அளவில் லட்சக்கணக்கான மாணவர்கள் ஒரே நேரத்தில் ஒரே தேர்வை எழுதுவது மிகவும் கடினமானது என்று குறிப்பிட்ட அவர்,"தேர்வை நடத்துவதில் ஒன்றிய அரசுக்கு ஏன் இந்த பிடிவாதம்?" என்றும் கேள்வி எழுப்பினார்.
முறைகேடு
நீட் தேர்வு முறைகேடு புகார்கள்
நீட் தேர்வில் சமீபத்தில் எழுந்த முறைகேடு புகார்கள் நாடு முழுவதும் பெரும் அரசியல் புயலை ஏற்படுத்தியுள்ளன. இதனால் நுழைவுத் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்றும், மாநில அளவிலான சேர்க்கை முறையை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்றும் எதிர்க்கட்சிகளும் தமிழக அரசும் தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றன.
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் மற்றும் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்யின் சமீபத்திய நிலைப்பாட்டிற்கு ஏற்பவே அமைச்சர் அருண்ராஜின் இந்த உரையும் அமைந்துள்ளது.
டெல்லியில் நீட் முறைகேடுகளுக்கு எதிராக நடைபெற்ற காங்கிரஸ் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்திருந்த விஜய், எதிர்க்கட்சித் தலைவர்கள் கைது செய்யப்பட்டதையும் கடுமையாக விமர்சித்திருந்தது குறிப்பிடத்தக்கது.