LOADING...
இனி அரசு அலுவலகங்களுக்கு அலைய வேண்டாம்: வாட்ஸ்அப் மூலம் சான்றிதழ்களைப் பெறலாம்; தமிழக அரசின் அதிரடித் திட்டம்
அரசு சான்றிதழ்களை வாட்ஸ்அப்பில் வழங்கும் சேவையை தமிழக அரசு தொடங்கியது

இனி அரசு அலுவலகங்களுக்கு அலைய வேண்டாம்: வாட்ஸ்அப் மூலம் சான்றிதழ்களைப் பெறலாம்; தமிழக அரசின் அதிரடித் திட்டம்

எழுதியவர் Sekar Chinnappan
Jan 09, 2026
04:59 pm

செய்தி முன்னோட்டம்

தமிழக அரசின் தகவல் தொழில்நுட்பத் துறை, பொதுமக்கள் அரசுச் சேவைகளை மிக எளிதாக அணுகும் வகையில் ஒரு புரட்சிகரமான மாற்றத்தைக் கொண்டுவந்துள்ளது. இனி பிறப்பு, இறப்பு மற்றும் வருமானச் சான்றிதழ்களைப் பெற வட்டாட்சியர் அலுவலகங்களுக்கோ அல்லது இ-சேவை மையங்களுக்கோ நேரில் செல்ல வேண்டிய அவசியம் இல்லை. வெறும் வாட்ஸ்அப் செய்தி மூலமாகவே உங்கள் கைபேசியில் சான்றிதழ்களைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்தத் திட்டத்தின் கீழ், வருவாய்த்துறை மூலம் வழங்கப்படும் சுமார் 50 வகையான முக்கியச் சான்றிதழ்களைப் பெற முடியும். குறிப்பாக, பிறப்பு, இறப்புச் சான்றிதழ்கள், வருமானச் சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ் மற்றும் சாதிச் சான்றிதழ் உள்ளிட்ட பல ஆவணங்களை இந்த டிஜிட்டல் முறை மூலம் எளிதாகப் பெறலாம்.

எவ்வாறு விண்ணப்பிப்பது?

வாட்ஸ்அப்பில் எவ்வாறு விண்ணப்பிப்பது?

பொதுமக்கள் தங்கள் கைபேசியில் இருந்து சான்றிதழ்களைப் பெற, தமிழக அரசு வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ வாட்ஸ்அப் எண்ணான 7845252525 என்பதற்கு ஒரு மெசேஜ் அனுப்ப வேண்டும். அதனைத் தொடர்ந்து திரையில் தோன்றும் வழிகாட்டுதல்களைப் பின்பற்றி, தேவையான விவரங்களை அளிப்பதன் மூலம் ஒரு சில நிமிடங்களில் சான்றிதழைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்ப நிலையை அறிந்துகொள்ளவும் இந்தத் தானியங்கி சேவை வசதியாக உள்ளது. அரசு அலுவலகங்களில் பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருப்பதைத் தவிர்க்கவும், இடைத்தரகர்களின் தலையீடு இல்லாத வெளிப்படையான சேவையை வழங்கவும் இந்தத் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. நிர்வாகத் திறனை மேம்படுத்தி, டிஜிட்டல் தொழில்நுட்பத்தைச் சாமானிய மக்களுக்கும் கொண்டு செல்வதில் தமிழக அரசு எடுத்துள்ள இந்த முயற்சி, ஒரு முன்னோடித் திட்டமாகப் பார்க்கப்படுகிறது.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

Advertisement