மாணவர் க்ரித்தி வர்மாவுக்கு தமிழக அரசு உறுதுணையாக இருக்கும் - முதல்வர் மு.க.ஸ்டாலின்
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அண்மையில் வெளியான பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 437 மதிப்பெண்கள் பெற்ற கிருஷ்ணகிரி மாவட்டத்தினை சேர்ந்த மாற்றுத்திறனாளி மாணவர் க்ரித்தி வர்மா மற்றும் அவர் தாயாரிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியதோடு தனது வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார். இது குறித்து ஸ்டாலின் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில், 10ம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற பள்ளி மாணவர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள். பொதுத்தேர்வு செய்திகளை படித்த பொழுது மாணவர் க்ரித்தி வர்மாவின் தேர்ச்சி என் கவனத்தினை ஈர்த்தது. அவருக்கு என்னுடைய நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள். அவரது தாயாரிடமும் தொலைப்பேசியில் பேசினேன். அவருக்கு கைகள் பொருத்திட தேவையான மருத்துவ நடவடிக்கைகளை மேற்கொண்டிட மக்கள் நல்வாழ்வுத்துறைக்கு உத்தரவிட்டுள்ளேன் என்று கூறியுள்ளார்.
கூலி வேலை செய்து மகனை படிக்க வைத்த தாயார்
மேலும் அவர், நம்பிக்கை ஒளியென மின்னிடும் மாணவர் க்ரித்தி வர்மா மேற்படிப்புகள் பலவும் கற்று சிறந்து விளங்கிடவேண்டும். அவருக்கு நமது அரசு உறுதுணையாக இருக்கும் என்று பதிவு செய்துள்ளார். கிருஷ்ணகிரி மாவட்டம் சோக்காடி கிராமத்தினை சேர்ந்த தம்பதி கஸ்தூரி-அருள்மூர்த்தி, இவர்களுக்கு க்ரித்தி வர்மா என்னும் மகன் உள்ளார். க்ரித்திவர்மாவுக்கு 4 வயது இருக்கும்பொழுது வீட்டின் மாடியில் விளையாடிக்கொண்டிருந்துள்ளார். அப்போது எதிர்பாராவிதமாக வீட்டை ஒட்டியுள்ள மின் கம்பத்திலிருந்து சென்ற மின்கம்பியினை பிடித்துள்ளார். இதில் மின்சாரம் தாக்கி க்ரித்தி வர்மா தனது 2 கைகளையும் இழந்துள்ளார். தனது இரு கைகளை இழந்த மகனை தாயார் கஸ்தூரி தனது சொந்த ஊரான ஜீனூர் கிராமத்திற்கு அழைத்துச்சென்று கூலிவேலை செய்து தனது மகனை படிக்க வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.