ஒவ்வொரு குடும்பத்தின் மீதும் ரூ.2.80 லட்சம் கடன்! தமிழ்நாடு அரசு பட்ஜெட் 2026-27: முழு விவரங்கள்
செய்தி முன்னோட்டம்
தமிழ்நாடு சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கையில் (பட்ஜெட்), மாநிலத்தின் ஒட்டுமொத்தக் கடன் சுமை சுமார் 10.98 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநிலத்தில் ரேஷன் கார்டு வைத்துள்ள குடும்பங்களின் அடிப்படையில் கணக்கிட்டால், சுமார் 2. 28 கோடி ரேஷன் அட்டைகள் நடைமுறையில் உள்ளன. இதன் அடிப்படையில் மாநில அரசின் மொத்தக் கடனைப் பிரித்துப் பார்த்தால், தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு குடும்பத்தின் மீதும் சராசரியாகச் சுமார் 2.80 லட்சம் ரூபாய் கடன் சுமை உள்ளது தெரியவந்துள்ளது.
2026-27
2026-27 நிதியாண்டின் கடன் வாங்கும் திட்டம் மற்றும் நிலுவைப் பொறுப்புகள்
பொதுக் கடன்களைப் பொறுத்தமட்டில், தமிழ்நாடு அரசு 2026-27 ஆம் நிதியாண்டில் மொத்தம் 1,73,445 கோடி ரூபாய் கடன் பெறத் திட்டமிட்டுள்ளது.
அதே வேளையில், பழைய கடன்களுக்காக 51,971 கோடி ரூபாயைத் திருப்பிச் செலுத்த முடிவு செய்துள்ளது.
பொதுக் கணக்கின் கீழ் உள்ள பொறுப்புகளையும் சேர்த்துக் கணக்கிடும் போது, 2026-27 ஆம் ஆண்டின் திருத்த வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் நிகரக் கடன் 1,20,964 கோடி ரூபாயாக உள்ளது.
இதன் விளைவாக, வரும் 31 மார்ச் 2027 அன்று மாநிலத்தின் மொத்த நிலுவைப் பொறுப்புகள் 10.98 லட்சம் கோடி ரூபாயாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
செலவினங்கள்
மாநில அரசின் செலவினங்கள் மற்றும் வட்டித் தொகை விவரங்கள்
தமிழ்நாடு அரசின் ஒட்டுமொத்த செலவினமானது 2026-27 நிதியாண்டில் 4.58 லட்சம் கோடி ரூபாயாக இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் அரசு ஊழியர்களின் ஊதியத்திற்காக 91,032 கோடி ரூபாயும், ஓய்வூதியப் பயன்களுக்காக 41,846 கோடி ரூபாயும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மேலும், பல்வேறு மானியங்கள் மற்றும் நிதி மாற்றங்களுக்காக 1,74,494 கோடி ரூபாயும், பராமரிப்புச் செலவுகளுக்கு 19,698 கோடி ரூபாயும் செலவிடப்பட உள்ளது.
முக்கியமாக, முந்தைய ஆண்டுகளில் வாங்கிய கடனுக்கான வட்டியாக மட்டுமே இந்த நிதியாண்டில் 78,683 கோடி ரூபாய் செலுத்தப்பட உள்ளது.
இலக்கு
வருவாய் பற்றாக்குறை மற்றும் வருங்கால இலக்குகள்
மாநிலத்தின் வருவாய் பற்றாக்குறை 2026-27 நிதியாண்டில் 55,775 கோடி ரூபாயாக மதிப்பிடப்பட்டுள்ளது.
இது மாநிலத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GSDP) 3.00 சதவீத நிதிப் பற்றாக்குறையாக உள்ளது.
இருப்பினும், மேம்பட்ட வரி நிர்வாகம் மற்றும் வருவாய் பெருக்க நடவடிக்கைகளின் காரணமாக, இந்த நிதிப் பற்றாக்குறை வரும் 2027-28 ஆம் நிதியாண்டில் 53,933 கோடி ரூபாயாகவும், 2028-29 ஆம் நிதியாண்டில் 51,058 கோடி ரூபாயாகவும் படிப்படியாகக் குறையும் என அரசு எதிர்பார்ப்பதாக பட்ஜெட்டில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.