தமிழ்நாடு பொதுத்துறை ஊழியர்களுக்கு 20% தீபாவளி போனஸ் அறிவிப்பு: முதலமைச்சர் உத்தரவு
செய்தி முன்னோட்டம்
தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும் பொதுத்துறை நிறுவனங்களின் சிறந்த செயல்பாட்டிற்கும் முக்கியப் பங்காற்றும் தொழிலாளர்களை ஊக்கப்படுத்தும் வகையில், 2025-26ஆம் ஆண்டிற்கான போனஸ் மற்றும் கருணைத் தொகையை வழங்கிட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதன்படி மாநிலம் முழுவதும் உள்ள 2,60,497 பொதுத்துறை ஊழியர்களுக்கு மொத்தமாக ரூ.367.20 கோடி போனஸாக வழங்கப்படவுள்ளது. அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி 'C' மற்றும் 'D' பிரிவு பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்குக் கீழ்வருமாறு போனஸ் பங்கீடு செய்யப்படும்.
போனஸ் அளவீடு
பொதுத்துறை நிறுவன ஊழியர்களுக்கான போனஸ் அளவீடு
லாபம் ஈட்டியுள்ள நிறுவனங்கள், தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகம், அரசுப் போக்குவரத்து கழகங்கள், நுகர்பொருள் வாணிபக் கழகம் மற்றும் ஆவின் ஊழியர்களுக்கு 8.33% மிகை ஊதியம் மற்றும் 11.67% கருணைத் தொகை என மொத்தம் 20% வழங்கப்படும்.
உபரித் தொகை இல்லாத நிறுவனங்கள், தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் மற்றும் சென்னை குடிநீர் வழங்கல் வாரிய ஊழியர்களுக்கு 8.33% மிகை ஊதியம் மற்றும் 1.67% கருணைத் தொகை என மொத்தம் 10% வழங்கப்படும்.
தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய ஊழியர்களுக்கு 8.33% மிகை ஊதியம் மட்டும் வழங்கப்படும்.
போனஸ் தொகை
குறைந்தபட்ச மற்றும் அதிகபட்ச போனஸ் தொகை
நிரந்தரத் தொழிலாளர்கள் குறைந்தபட்சமாக ரூ.8,400/- முதற்கொண்டு அதிகபட்சமாக ரூ.16,800/- வரை போனஸ் தொகையாகப் பெறுவார்கள்.
மேலும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் தற்காலிக அடிப்படையில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு கருணைத் தொகையாக ரூ.3,000/- வழங்கப்படவுள்ளது.
கூட்டுறவு அமைப்புகளில் பணிபுரியும் பணியாளர்களுக்கான போனஸ் ஆணைகள் தனியே வெளியிடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.