
ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு சீராய்வு மனு; அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்
செய்தி முன்னோட்டம்
ஆசிரியர் பணிக்கு ஆசிரியர் தகுதித் தேர்வு (TET) கட்டாயம் என்ற உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு எதிராகத் தமிழக அரசு சீராய்வு மனு தாக்கல் செய்யும் எனப் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார். உச்ச நீதிமன்றம் கடந்த செப்டம்பர் 1 ஆம் தேதி பிறப்பித்த உத்தரவில், ஆசிரியர் தகுதித் தேர்வு தேர்ச்சி என்பது ஆசிரியர் பணியில் தொடரவும், பதவி உயர்வு பெறவும் அவசியம் என அறிவித்தது. மேலும், ஓய்வு பெற இன்னும் 5 ஆண்டுகள் மட்டுமே உள்ள ஆசிரியர்கள் தவிர, மற்றவர்கள் 2 ஆண்டுகளுக்குள் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்றும், அவ்வாறு தேர்ச்சி பெறாதவர்கள் விருப்ப ஓய்வு பெறலாம் அல்லது கட்டாய ஓய்வு அளிக்கப்படுவார்கள் என்றும் குறிப்பிட்டிருந்தது.
அதிர்ச்சி
2012க்கு முன்பு பணியில் சேர்ந்த ஆசிரியர்கள் அதிர்ச்சி
இந்தத் தீர்ப்பால், 2012 ஆம் ஆண்டு ஆசிரியர் தகுதித் தேர்வு கட்டாயமாக்கப்படுவதற்கு முன்பு பணியில் சேர்ந்த ஆசிரியர்கள் அதிர்ச்சியடைந்தனர். இந்தச் சூழலில், தமிழக அரசு ஆசிரியர்களுக்கு ஆதரவாக நிற்கும் என அமைச்சர் அன்பில் மகேஷ் உறுதியளித்திருந்தார். அதன்படி, தற்போது சீராய்வு மனு தாக்கல் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பில், "உச்ச நீதிமன்றத்தின் உத்தரவைப் பின்பற்றினால், பெருமளவிலான ஆசிரியர்களுக்குக் கட்டாய ஓய்வு அளிக்க வேண்டியிருக்கும். இது தமிழகத்தில் ஆசிரியர்கள் பற்றாக்குறையை ஏற்படுத்தி, லட்சக்கணக்கான மாணவர்களின் கல்வி பாதிக்கப்படும்." என்று கவலை தெரிவித்தார். "கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி, TET தேர்வு கட்டாயம் என்பது புதிய ஆசிரியர் நியமனங்களுக்கு மட்டுமே, ஏற்கெனவே பணியில் உள்ளவர்களுக்குப் பொருந்தாது` என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.