LOADING...
கோடைகால வெப்ப அலையிலிருந்து தற்காத்துக்கொள்வது எப்படி? தமிழக அரசு பாதுகாப்பு வழிகாட்டுதல்கள் வெளியீடு
கோடைகால வெப்ப அலையிலிருந்து தற்காத்துக்கொள்வதற்கான வழிகாட்டுதல்கள் வெளியீடு

கோடைகால வெப்ப அலையிலிருந்து தற்காத்துக்கொள்வது எப்படி? தமிழக அரசு பாதுகாப்பு வழிகாட்டுதல்கள் வெளியீடு

எழுதியவர் Sekar Chinnappan
Apr 20, 2026
07:41 pm

செய்தி முன்னோட்டம்

தமிழகத்தில் கோடைகால வெப்பம் அதிகரித்து வரும் நிலையில், பொதுமக்கள், கால்நடைகள் மற்றும் தொழிலாளர்களைப் பாதுகாக்கும் நோக்கில் தமிழ்நாடு அரசு முக்கியமான வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. அவை பின்வருமாறு:- கோடை வெப்பத்தை எதிர்கொள்ள, வானிலை முன்னெச்சரிக்கைகளை TNAlert மொபைல் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள். வீட்டை குளிர்ச்சியாக வைக்க திரைச்சீலைகள், சூரிய ஒளி மறைப்புகள் மற்றும் பிரதிபலிப்பான்களைப் பயன்படுத்துங்கள். ORS, குடிநீர் மற்றும் அத்தியாவசிய மருந்துகளை எப்போதும் கைவசம் வைத்திருப்பது அவசியம். காலை அல்லது மாலை நேரங்களில் மட்டுமே வெளிப்புற வேலைகள் மற்றும் பயணங்களைத் திட்டமிடுங்கள். வெளிர் நிறத்திலான தளர்வான பருத்தி ஆடைகளை அணிவது உடலுக்கு இதமளிக்கும். மேலும், கர்ப்பிணிகள், குழந்தைகள், வயதானவர்கள் மற்றும் நாள்பட்ட நோயாளிகளின் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்துங்கள்.

கவனிக்க வேண்டியவை

வெப்ப அலையின் போது கவனிக்க வேண்டியவை

மதியம் 12.00 மணி முதல் 3.00 மணி வரை வெப்பநிலை உச்சத்தில் இருக்கும் என்பதால், அந்த நேரங்களில் வெளியில் செல்வதைத் தவிர்க்கவும். தாகம் இல்லாவிட்டாலும் அவ்வப்போது தண்ணீர் அருந்தவும். நீர்ச்சத்தைப் பராமரிக்க மோர், எலுமிச்சை சாறு, இளநீர் மற்றும் ORS பானங்களை உட்கொள்ளுங்கள். வெளியில் செல்லும்போது குடை அல்லது தொப்பி அணிந்து தலையை மறைத்துக்கொள்ளுங்கள். சூடான பரப்புகளில் வெறுங்காலுடன் நடப்பதைத் தவிர்த்து, எளிதில் ஜீரணிக்கக்கூடிய உணவுகளை உண்ணுங்கள். மது மற்றும் காஃபின் கலந்த பானங்களைத் தவிர்ப்பது நல்லது. நிறுத்தப்பட்ட வாகனங்களுக்குள் குழந்தைகள், முதியவர்கள் அல்லது செல்லப்பிராணிகளை ஒருபோதும் விட்டுச் செல்லாதீர்கள்.

பணியிடங்கள் 

தொழிலாளர்கள் மற்றும் பணியிடங்களுக்கான அறிவுறுத்தல்கள்

வெப்ப அலை எச்சரிக்கைகளைத் தொழிலாளர்களுக்கு முன்கூட்டியே தெரிவிக்க வேண்டும். கடுமையான பணிகளை வெப்பம் குறைவான அதிகாலை அல்லது மாலை நேரங்களில் திட்டமிடுங்கள். பணியிடங்களில் சுத்தமான குடிநீர், நிழல், ஓய்வு இடைவெளி, ORS மற்றும் முதலுதவிப் பெட்டிகளை எப்போதும் வைத்திருக்கவும். புதிய பணியாளர்களுக்கு வெப்பத்திற்குப் பழகும் வரை இலகுவான பணிகளை ஒதுக்குங்கள். கட்டிடங்களில் குளிர் கூரை தொழில்நுட்பம் (Cool roof technology) அல்லது வெப்பத்தைத் தடுக்கும் பெயிண்டுகளைப் பயன்படுத்துவது உட்புற வெப்பத்தைக் குறைக்க உதவும்.

Advertisement

கால்நடைகள்

கால்நடை பராமரிப்பு

கால்நடைகளை நிழலான இடங்களில் வைத்து, போதுமான அளவு குளிர்ந்த குடிநீர் வழங்குங்கள். காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை அவற்றை வேலை செய்ய வைப்பதைத் தவிர்க்கவும். கொட்டகைகளில் மின்விசிறிகள் மற்றும் தண்ணீர் தெளிப்பான்களைப் பயன்படுத்தி குளிர்ச்சியாகப் பராமரியுங்கள். அதிக வெப்பத்தின் போது விலங்குகளின் மீது தண்ணீர் தெளிக்கலாம். வெம்மை குறைந்த நேரங்களில் மட்டும் மேய்ச்சலுக்கு அனுப்புங்கள். கால்நடைகளுக்கு பசுந்தீவனம் மற்றும் தாது உப்புக்களைக் கட்டாயம் வழங்கவும்.

Advertisement

முதலுதவி

வெப்ப வாதத்திற்கான முதலுதவி

வெயிலால் பாதிக்கப்பட்ட நபரை உடனடியாக நிழலான குளிர்ந்த இடத்திற்கு மாற்றவும். தலை, கழுத்து மற்றும் உடலில் ஈரமான துணியினால் ஒத்தடம் கொடுக்கவும் அல்லது குளிர்ந்த நீரை ஊற்றவும். பாதிக்கப்பட்ட நபர் சுயநினைவுடன் இருந்தால் ORS அல்லது மோர் கொடுக்கவும். மிக அதிக உடல் வெப்பநிலை, கடும் தலைவலி, மயக்கம் அல்லது சுயநினைவின்மை போன்ற அறிகுறிகள் இருந்தால், தாமதிக்காமல் 108 ஆம்புலன்ஸை அழைத்து அருகிலுள்ள சுகாதார மையத்திற்கு அழைத்துச் செல்லுங்கள்.

Advertisement