மின் தேவையை பூர்த்தி செய்ய 17,000 மெகாவாட் கொள்முதல்; தமிழக அரசு டெண்டர் வெளியீடு
செய்தி முன்னோட்டம்
தமிழகத்தில் மின்சாரத் தேவைக்கும் உள்ளூர் மின் உற்பத்திக்கும் இடையே கணிசமான இடைவெளி நிலவி வருகிறது. இந்த பற்றாக்குறையைப் போக்கி மாநிலம் முழுவதும் தடையற்ற மின் விநியோகத்தை உறுதி செய்வதற்காக வெளிச்சந்தையிலிருந்து 17,000 மெகாவாட் மின்சாரத்தைக் கொள்முதல் செய்ய தமிழக அரசு புதிய டெண்டரை வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகம் சார்பில் கோரப்பட்டுள்ள 5-வது குறுகியகால டெண்டர் இதுவாகும்.
மாதவாரி கணக்கு
மாதம் வாரியாகப் பிரிக்கப்பட்ட மின்சாரக் கொள்முதல் அளவுகள்
வரும் 2027-ஆம் ஆண்டின் ஜனவரி முதல் ஜூன் வரையிலான 6 மாத காலத்திற்கு இக் கொள்முதல் திட்டம் திட்டமிடப்பட்டுள்ளது.
இதன்படி, ஜனவரியில் 2,000 மெகாவாட், பிப்ரவரியில் 3,000 மெகாவாட், மார்ச்சில் 3,000 மெகாவாட், ஏப்ரலில் 3,500 மெகாவாட், மே மாதத்தில் 2,500 மெகாவாட் மற்றும் ஜூன் மாதத்தில் 2,500 மெகாவாட் என மொத்தம் 17,000 மெகாவாட் மின்சாரம் கொள்முதல் செய்யப்பட உள்ளது.
3 டெண்டர்கள் ரத்து
நவம்பர் 13-ஆம் தேதி திறக்கப்படும் புதிய டெண்டர்
முன்னதாக வெளிச்சந்தையில் மின்சாரம் வாங்க நான்கு டெண்டர்கள் கோரப்பட்டிருந்தன.
அவற்றில் ஒரு டெண்டரின் விலையை மட்டுமே ஏற்றுக்கொண்டு மின் கொள்முதல் செய்யப்பட்ட நிலையில், மற்ற 3 டெண்டர்கள் அதிக விலை காரணமாக ரத்து செய்யப்பட்டன.
தற்சமயம் விடப்பட்டுள்ள 5-வது டெண்டர் வரும் நவம்பர் 13-ஆம் தேதி திறக்கப்பட்டு, அன்றைய தினம் நிறுவனங்கள் பதிவு செய்யும் விலையை அரசு பரிசீலித்து இறுதி முடிவெடுக்கும்.