LOADING...
தமிழகத்தில் தீபாவளிக்கு மறுநாள் அரசு விடுமுறை அறிவிப்பு: தொடர்ச்சியாக 4 நாட்கள் விடுமுறையால் மக்கள் மகிழ்ச்சி
தமிழகத்தில் தீபாவளிக்கு மறுநாள் அரசு விடுமுறை அறிவிப்பு

தமிழகத்தில் தீபாவளிக்கு மறுநாள் அரசு விடுமுறை அறிவிப்பு: தொடர்ச்சியாக 4 நாட்கள் விடுமுறையால் மக்கள் மகிழ்ச்சி

எழுதியவர் Sekar Chinnappan
Oct 18, 2025
11:15 am

செய்தி முன்னோட்டம்

தமிழ்நாட்டில் தீபாவளிப் பண்டிகைக்கு மறுநாளான செவ்வாய்க்கிழமை (அக்டோபர் 21) அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கங்களின் தொடர்ச்சியான கோரிக்கையைப் பரிசீலித்து, தமிழக அரசு இந்த முடிவை எடுத்துள்ளது. இதனால், வரும் திங்கட்கிழமை கொண்டாடப்படவுள்ள தீபாவளியுடன் சேர்த்து, தொடர்ந்து நான்கு நாட்கள், அதாவது சனி, ஞாயிறு, திங்கள் மற்றும் செவ்வாய் கிழமைகளுக்கு அரசு விடுமுறை கிடைத்துள்ளது. வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களில் பணிபுரியும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குச் சென்று தீபாவளியைக் கொண்டாடிவிட்டு, பண்டிகைக்கு மறுநாளே அவசரமாகத் திரும்புவதில் உள்ள சிரமங்களைக் கருத்தில் கொண்டு, இந்த விடுமுறையை அரசு வழங்கியுள்ளது.

சிரமங்கள்

உடனடியாக திரும்புவதில் உள்ள சிரமங்கள்

முன்னதாக, இதுதொடர்பாக பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம் உள்ளிட்ட பல்வேறு அரசு ஊழியர் சங்கங்கள் தமிழக அரசுக்குக் கோரிக்கை விடுத்திருந்தன. பண்டிகை இரவில் பட்டாசுகளை வெடித்து முடித்துவிட்டு, மறுநாள் காலை உடனடியாகப் பணிக்குத் திரும்ப வேண்டிய கட்டாயத்தால் ஏற்படும் சிரமங்களைச் சுட்டிக்காட்டி இந்த விடுமுறை கோரப்பட்டது. இந்தக் கோரிக்கையை ஏற்று தமிழக அரசு விடுமுறை அறிவித்துள்ளதால், சொந்த ஊர்களுக்குச் சென்று குடும்பத்துடன் தீபாவளியைக் கொண்டாடிவிட்டுத் திரும்புவதற்கு ஊழியர்களுக்குத் தாராளமான அவகாசம் கிடைத்துள்ளது. அக்டோபர் 21 அன்று தமிழ்நாடு முழுவதும் அனைத்து அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில், அதை ஈடுசெய்யும் வகையில், அக்டோபர் 25 வேலை நாளாக செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.