தீபாவளிக்கு கூடுதளாக ஒருநாள் விடுமுறை; வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு
அக்டோபர் 31, 2024 அன்று தீபாவளி கொண்டாட்டத்தைத் தொடர்ந்து, நவம்பர் 1 வெள்ளிக்கிழமையும் விடுமுறை வழங்கப்படுவதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இந்த முடிவு மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு பொருந்தும். இந்த ஆண்டு, தீபாவளி வியாழன் அன்று வருகிறது. இது ஏற்கனவே பொது விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது. தீபாவளிக்குப் பிறகு வரும் வெள்ளிக்கிழமையை விடுமுறையாகச் சேர்ப்பதன் மூலம், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வார இறுதி நாட்கள் உட்பட, நான்கு நாள் விடுமுறை கிடைக்கும். இருப்பினும், கூடுதல் விடுமுறையை ஈடு செய்யும் வகையில், நவம்பர் 9 சனிக்கிழமை அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு வேலை நாளாக இருக்கும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழக அரசின் அறிக்கை
இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது பின்வருமாறு:- இவ்வாண்டு தீபாவளியை 31.10.2024 அன்று கொண்டாடும் பொருட்டு தமது சொந்த ஊர்களுக்குச் சென்று திரும்பும் மாணவர்கள், அவர்தம் பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் அரசு அலுவலர்களின் நலனைக் கருத்தில் கொண்டு 01.11.2024 அன்று ஒரு நாள் மட்டும், தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்தும் அரசு அலுவலகங்கள், பொதுத் துறை நிறுவனங்கள், பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கவும், அவ்விடுமுறையை ஈடு செய்யும் வகையில் 09.11.2024 அன்று பணி நாளாக அறிவித்தும் தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு பலருக்கு மகிழ்ச்சியைத் தந்துள்ளது. குடும்பங்கள் தீபாவளியைக் கொண்டாடுவதற்கும், தொடர்ச்சியான விடுமுறைக் காலத்தை அனுபவிப்பதற்கும் இது உதவும்.