LOADING...
தேர்தல் 2026: வங்கி, டாஸ்மாக் முதல் சுற்றுலாத் தலங்கள் வரை இன்று எவை இயங்கும்?
தேர்தலையொட்டி மாநிலம் முழுவதும் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது

தேர்தல் 2026: வங்கி, டாஸ்மாக் முதல் சுற்றுலாத் தலங்கள் வரை இன்று எவை இயங்கும்?

எழுதியவர் Venkatalakshmi V
Apr 23, 2026
07:31 am

செய்தி முன்னோட்டம்

தமிழகச் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று (ஏப்ரல் 23) நடைபெறுவதையொட்டி, மாநிலம் முழுவதும் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் தங்களின் ஜனநாயக கடமையை எவ்விதத் தடையுமின்றி ஆற்றுவதற்காகத் தேர்தல் ஆணையம் மற்றும் தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளையும் தளர்வுகளையும் அறிவித்துள்ளன. மாநிலத்தில் உள்ள அனைத்து நகைக்கடைகள், வணிக வளாகங்கள், திரையரங்குகள் மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அனைத்துத் தனியார் நிறுவனப் பணியாளர்களுக்கும் சம்பளத்துடன் கூடிய விடுமுறை வழங்கப்பட வேண்டும் எனத் தேர்தல் ஆணையம் கறாராக உத்தரவிட்டுள்ளது. இதனை மீறிப் பணியாளர்களை வேலைக்கு அழைக்கும் நிறுவனங்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

வங்கி

வங்கிகள் மற்றும் நிதிச் சேவைகள்

இன்று பொது விடுமுறை என்பதால் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகள் செயல்படாது. இருப்பினும், வாடிக்கையாளர்கள் சிரமமின்றிப் பணப்பரிவர்த்தனை செய்ய ஏதுவாக ஏடிஎம் (ATM) சேவைகள், யுபிஐ (UPI) பணப்பரிமாற்றம் மற்றும் டிஜிட்டல் வங்கிச் சேவைகள் தடையின்றி இயங்கும். வங்கிக் கிளைகளுக்கு நேரடியாகச் சென்று மேற்கொள்ளும் சேவைகள் மட்டுமே இன்று நிறுத்தி வைக்கப்படும். பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட அனைத்துக் கல்வி நிறுவனங்களுக்கும் இன்று விடுமுறை. தேர்தலை முன்னிட்டு அமைதியான சூழலை உறுதி செய்ய, மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து மதுபானக் கடைகளும் (TASMAC) மற்றும் பார்களும் இன்று முழுமையாக மூடப்பட்டிருக்கும். எவ்வித மது விற்பனையும் சட்டவிரோதமாக நடைபெறாமல் இருக்கத் தீவிரக் கண்காணிப்புப் பணிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

சுற்றுலாத் தலங்கள்

சுற்றுலாத் தலங்கள் மற்றும் அத்தியாவசியச் சேவைகள்

சுற்றுலாப் பயணிகளின் கவனத்திற்கு, பொள்ளாச்சி அருகே உள்ள டாப்ஸ்லிப் மற்றும் ஆழியார் அணைப் பூங்கா ஆகிய இடங்களுக்குச் செல்ல இன்று ஒரு நாள் மட்டும் தடை விதிக்கப்பட்டுள்ளது. அங்கு பணியாற்றும் ஊழியர்கள் வாக்களிக்க ஏதுவாக இந்த இடங்கள் மூடப்படுகின்றன. அதேபோல், திருநெல்வேலியில் உள்ள பொருநை அருங்காட்சியகம் உட்பட தமிழக தொல்லியல் துறையின் கீழ் இயங்கும் அனைத்து அருங்காட்சியகங்களுக்கும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வாக்குப்பதிவு நாளிலும் அவசர காலத் தேவைகளைக் கருதி மருத்துவமனைகள், மருந்தகங்கள் மற்றும் ஆம்புலன்ஸ் சேவைகள் 24 மணிநேரமும் தடையின்றிச் செயல்படும். பொதுப் போக்குவரத்துப் பேருந்துகள், மின்சாரம் மற்றும் பால் விநியோகம் போன்ற அத்தியாவசியச் சேவைகள் வழக்கம் போல் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement