தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்களுக்கு இரட்டிப்பு ஊதியம்; தமிழக அரசு அறிவிப்பு
செய்தி முன்னோட்டம்
தமிழகத்தில் தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள அரசு ஊழியர்களுக்குச் சாதகமான முக்கிய அறிவிப்பைத் தமிழக அரசு வெளியிட்டுள்ளது. தேர்தல் ஆணையத்தின் பரிந்துரை மற்றும் வருவாய்த்துறை சங்கங்களின் கோரிக்கையை ஏற்று, வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் (BLO) மற்றும் மேற்பார்வையாளர்களுக்கான (Supervisor) மதிப்பூதியத்தை இரட்டிப்பு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. வாக்காளர் பட்டியல் திருத்தம் மற்றும் அது தொடர்பான களப்பணிகளில் ஈடுபடும் ஊழியர்களின் பணிச்சுமையைக் கருத்தில் கொண்டு இந்த ஊதிய உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
விபரம்
ஊதிய விபரங்கள்
வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கான (BLO) மதிப்பூதியம் ₹6,000 லிருந்து ₹12,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. சிறப்புத் திருத்தப் பணிக்கான ஊக்கத்தொகை ₹1,000 லிருந்து ₹2,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. மேற்பார்வையாளர்களுக்கான (Supervisor) ஊதியம் ₹12,000 லிருந்து ₹18,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. ஆசிரியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் போன்றோர் தங்களின் வழக்கமான பணிகளுடன் சேர்த்து, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல் போன்ற பணிகளை மேற்கொள்வதால் ஏற்படும் பணி நெருக்கடியைக் கருத்தில் கொண்டே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
வாக்காளர்
வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளின் தீவிரம்
தற்போது தமிழ்நாடு முழுவதும் 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தப் பணிகள் (SIR) டிசம்பர் 4 வரை நடைபெற்று வருகின்றன. பணிச்சுமை மற்றும் மன உளைச்சல் காரணமாக இந்தப் பணிகளைப் புறக்கணிப்பதாக வருவாய்த்துறை சங்கங்கள் முன்னர் அறிவித்திருந்த நிலையில், இந்த ஊதிய உயர்வு அவர்களுக்குப் பெரிய நிவாரணமாகவும், பணியைத் துல்லியமாகச் செய்து முடிக்க ஒரு ஊக்கமாகவும் அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.