
முதலீடுகளை ஈர்ப்பதற்காக ஜெர்மனி மற்றும் பிரிட்டனுக்கு கிளம்பினார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்
செய்தி முன்னோட்டம்
தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை ஒரு டிரில்லியன் டாலராக உயர்த்துவதற்கான இலக்குடன், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சனிக்கிழமை (ஆகஸ்ட் 30) ஜெர்மனி மற்றும் பிரிட்டனுக்கு ஒரு வார கால அரசுமுறைப் பயணத்தைத் தொடங்கினார். பயணத்திற்கு முன்னதாக சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், இந்தப் பயணம் புதிய முதலீடுகளை ஈர்ப்பதை நோக்கமாகக் கொண்டிருப்பதாகத் தெரிவித்தார். இதுவரை, மேற்கொண்ட நான்கு வெளிநாட்டுப் பயணங்கள் மூலம் ₹18,500 கோடி மதிப்புள்ள முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளன. இதன் தொடர்ச்சியாக, இந்தப் பயணத்தின் மூலம் மேலும் பல ஒப்பந்தங்களை மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளார். ஏற்கெனவே, தமிழக அரசு ₹10.62 லட்சம் கோடி மதிப்பிலான 922 புரிந்துணர்வு ஒப்பந்தங்களை மேற்கொண்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். இந்த வளர்ச்சிக்கு மத்திய அரசின் புள்ளிவிவரங்களே சான்று என்றும் அவர் கூறினார்.
முதலீடு
முன்னணி தொழில் நிறுவனங்களை தமிழகத்தில் முதலீடு செய்ய அழைப்பு
இந்தப் பயணத்தின்போது, ஜெர்மனி மற்றும் பிரிட்டனில் உள்ள முன்னணித் தொழில் நிறுவனங்களின் தலைவர்களைச் சந்தித்துத் தமிழகத்தில் முதலீடு செய்ய அழைப்பு விடுக்க உள்ளார். மேலும், பிரிட்டனின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் நடைபெற உள்ள பெரியார் புகைப்படம் திறப்பு விழாவிலும் முதலமைச்சர் கலந்துகொள்ள உள்ளார். பயணத்தை முடித்துக் கொண்டு செப்டம்பர் 8 ஆம் தேதி மீண்டும் இந்தியா திரும்பும் வகையில் தனது பயணம் திட்டமிடப்பட்டு இருப்பதாகவும் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார். எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியின் வெளிநாட்டுப் பயணத்தைப் போலத் தன்னுடையது இருக்காது என்றும், தனது பயணம் உறுதியான திட்டங்களைச் செயல்படுத்தும் நோக்கம் கொண்டது என்றும் அவர் கூறினார்.