
11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்துக்கான அரசாணை வெளியிட்டது தமிழக பள்ளிக் கல்வித் துறை
செய்தி முன்னோட்டம்
தமிழ்நாடு அரசு, மாநில கல்விக் கொள்கையை அமல்படுத்தும் ஒரு முக்கிய நடவடிக்கையாக, நடப்பு கல்வியாண்டு (2025-26) முதல் 11 ஆம் வகுப்புக்கான பொதுத் தேர்வை ரத்து செய்து பள்ளிக் கல்வித் துறை அரசாணை வெளியிட்டுள்ளது. இந்தக் கொள்கையின் கீழ் 11 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்படும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது இதற்கான அதிகாரப்பூர்வ உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த முடிவின் மூலம், மாநிலத்தில் 2017-18 கல்வி ஆண்டிற்கு முன்னர் இருந்த நடைமுறையே மீண்டும் பின்பற்றப்படும். மாணவர்களுக்கு இனி ஒருங்கிணைந்த மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படாது.
சான்றிதழ்
12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு மட்டுமே சான்றிதழ்
மாறாக, 12 ஆம் வகுப்புப் பொதுத் தேர்வுக்கு மட்டுமே மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும். பொதுத் தேர்வை ரத்து செய்வது என்பது, மாணவர்களின் மீதான தேர்வின் அழுத்தத்தைக் குறைக்கும் நோக்கத்துடன் மேற்கொள்ளப்படுகிறது. எனினும், 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதால், மீண்டும் கடந்த காலங்களை போலவே 11 ஆம் வகுப்பு பாடங்கள் நடத்தப்படாமலேயே 12 ஆம் வகுப்புப் பாடங்களுக்கு தனியார் பள்ளிகள் மாணவர்களை தயார் செய்யும் என கல்வித்துறை வல்லுநர்கள் கவலை தெரிவிக்கின்றனர். இருப்பினும், இதன் மூலம், மாநில கல்விக் கொள்கை படிப்படியாக அமலுக்கு வருவதற்கான ஒரு தெளிவான தொடக்கமாக இந்த அரசாணை பார்க்கப்படுகிறது.