தேர்தல் 2026: பிப்ரவரி 2-ல் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்ய தமிழக அரசு முடிவு
செய்தி முன்னோட்டம்
தமிழகத்தில் 2026-ஆம் ஆண்டு மே மாதம் நடைபெற வேண்டிய சட்டமன்ற தேர்தலை முன்கூட்டியே, அதாவது மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்திலேயே நடத்துவதற்கு திமுக அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தினமலரில் வெளியான செய்தியின்படி, இதன் ஒரு பகுதியாக, பிப்ரவரி 2-ஆம் தேதி தமிழக சட்டப்பேரவையில் 'இடைக்கால பட்ஜெட்' தாக்கல் செய்யப்பட உள்ளதாக கூறப்படுகிறது. பொதுவாக ஒரு அரசின் பதவிக்காலம் முடியும் ஆண்டில் முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட மாட்டாது. தேர்தலுக்குச் சில மாதங்களே உள்ள நிலையில், இடைக்கால பட்ஜெட்டையே அரசு தாக்கல் செய்யும். தற்போது தமிழக அரசு பிப்ரவரி தொடக்கத்திலேயே பட்ஜெட்டை தாக்கல் செய்ய முடிவெடுத்திருப்பது, தேர்தல் ஆணையம் பிப்ரவரி அல்லது மார்ச் மாதத்தில் தேர்தல் அறிவிப்பை வெளியிடும் என்ற எதிர்பார்ப்பை உறுதிப்படுத்துகிறது.
எதிர்பார்ப்புகள்
பட்ஜெட்டில் எதிர்பார்க்கப்படும் அறிவிப்புகள்
இந்த இடைக்கால பட்ஜெட்டில் பொதுமக்களைக் கவரும் வகையிலான பல்வேறு அதிரடி அறிவிப்புகள் மற்றும் புதிய நலத்திட்டங்கள் இடம்பெறக்கூடும். குறிப்பாக, மகளிர் உரிமைத் தொகை விரிவாக்கம், இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புத் திட்டங்கள் மற்றும் உள்கட்டமைப்பு சார்ந்த புதிய அறிவிப்புகள் இதில் இடம்பெறலாம். மத்திய பட்ஜெட் பிப்ரவரி 1-ஆம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், அதற்கு அடுத்த நாளே (பிப்ரவரி 2) தமிழக அரசு தனது பட்ஜெட்டை தாக்கல் செய்ய திட்டமிட்டுள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டால் உடனடியாக நடத்தை விதிகள் அமலுக்கு வரும் என்பதால், அதற்கு முன்னதாகவே அனைத்து முக்கியமான அறிவிப்புகளையும் வெளியிட்டுவிட அரசு முனைப்பு காட்டி வருகிறது.