'அத்தனையும் ஆதாரத்தோடு இருக்கு, ஓபன் பண்ண வச்சிடாதீங்க': சட்டப்பேரவையில் கெத்து காட்டிய முதல்வர் விஜய்
செய்தி முன்னோட்டம்
தமிழ்நாடு சட்டப்பேரவையில் நீர்வளம், ஊரக வளர்ச்சி மற்றும் சுற்றுலா ஆகிய துறைகளின் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்தின் போது, ஆளுங்கட்சியான தவெக மற்றும் எதிர்க்கட்சியான திமுக எம்.எல்.ஏ.-க்களிடையே காரசாரமான வாக்குவாதம் ஏற்பட்டது. திமுக முன்னாள் அமைச்சர் பெரியசாமி பேசத் தொடங்கியபோது, திமுக ஆட்சிக் காலத்தில் நடைபெற்ற ஊழல்கள் குறித்த குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்த எதிர்க்கட்சி உறுப்பினர்கள், ஊழல் நடைபெற்றதற்கான ஆதாரங்கள் எங்கே என்று கூச்சலிட்டு தொடர் கோஷங்களை எழுப்பினர்.
பதில்
கூச்சலுக்கு இடையே முதலமைச்சர் விஜய்யின் பதில்
எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கூச்சலையும் கோஷங்களையும் தொடர்ந்து, அவையில் குறுக்கிட்டுப் பேசிய முதலமைச்சர் விஜய் அவர்களுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் பேசினார்.
"சொல்லக் கூடாது என்றுதான் நினைத்தேன், ஆனால் மீண்டும் மீண்டும் ஆதாரம் ஆதாரம் என்று கேட்கிறார்கள். கடந்த வாரம் நிதியமைச்சர் மூன்று முக்கியத் துறைகளை ஆராய்ந்து, அதற்கான முக்கியக் கோப்புகள் எனது மேஜையில் இருப்பதாகத் தெரிவித்திருந்தார். அவர் ஏதோ போகிற போக்கில் அந்த வார்த்தையைச் சொல்லவில்லை" என்று அவர் அழுத்தமாகக் குறிப்பிட்டார்.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
I know very well where, when, and how to speak - Chief Minister Joseph Vijay pic.twitter.com/T3S0HHXhwc
— Vignesh Theni (@Vignesh_twitz) August 19, 2026
எச்சரிக்கை
"எப்போது எதை ஓப்பன் பண்ணணுமோ அப்போ ஓப்பன் ஆகும்"
தொடர்ந்து பேசிய அவர், "அந்தக் கோப்புகள் அனைத்தும் உண்மையிலேயே இப்போது எனது மேஜையில்தான் இருக்கின்றன. அவை அத்தனையும் தகுந்த ஆதாரங்களோடுதான் உள்ளன. எனவே என்னை அதை ஓப்பன் பண்ண வச்சுடாதீங்க".
"எதை எப்போது ஓப்பன் பண்ண வேண்டுமோ, அதை அப்போது சரியாக ஓப்பன் செய்வோம்" என்று எச்சரிக்கை விடுக்கும் வகையில் ஆவேசமாகப் பதிலளித்தார்.
அதோடு, 'மக்கள் கிட்ட எப்போ பேசணும், என்ன பேசணும், எப்படி பேசணும் எல்லாம் பேசிட்டு தான், அன்பா, அசையா எங்களை இங்க கொண்டு வந்து உட்கார வெச்ருக்காங்க. நான் பேசுவேன், பேசக்கூடாதுனு எல்லாம் ஒண்ணுமில்ல. இடைத்தேர்தல்லையாவது சில பேருக்கு, சில நல்லது நடக்கணும்ல.." என கூறினார்.