Loading...
அசுரன் வெளியாகி 7 ஆண்டுகள் நிறைவு: சிவசாமியின் மாஸ் வசனத்தைக் கொண்டாடும் ரசிகர்கள்
அசுரன் 7 ஆண்டுகளான நிலையில், சிவசாமியின் மாஸ் வசனத்தைக் கொண்டாடும் ரசிகர்கள்

அசுரன் வெளியாகி 7 ஆண்டுகள் நிறைவு: சிவசாமியின் மாஸ் வசனத்தைக் கொண்டாடும் ரசிகர்கள்

எழுதியவர் Vasuki
Oct 04, 2026
04:21 pm

செய்தி முன்னோட்டம்

தமிழ் சினிமாவில் தேசிய விருது உள்ளிட்ட பெருமைகளைப் பெற்று வசூலிலும் சாதனை படைத்த நடிகர் தனுஷ் மற்றும் இயக்குநர் வெற்றிமாறன் கூட்டணியின் 'அசுரன்' திரைப்படம் வெளியாகி 7 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. நடிகர் தனுஷ், கோலிவுட் தொடங்கி பான் இந்தியா மற்றும் ஹாலிவுட் சினிமா வரை தனது தனித்துவமான நடிப்பால் சர்வதேச அளவில் முத்திரை பதித்து வருகிறார். இயக்குநர் வெற்றிமாறனுடனான அவரது கலைப் பிணைப்பு தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத அடையாளமாக மாறியுள்ளது. பொல்லாதவன் தொடங்கி ஆடுகளம், வடசென்னை என வெற்றி நடைபோட்ட இவர்களது அசைக்க முடியாத கூட்டணி, 4-வது முறையாக கைகோர்த்து 2019-ஆம் ஆண்டு அக்டோபர் 4-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான அசுரன் திரைப்படம் இன்றுடன் 7 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது.

சாதிய ஒடுக்குமுறை

எழுத்தாளர் பூமணியின் நாவல்

எழுத்தாளர் பூமணியின் 'வெக்கை' நாவலைத் தழுவி உருவான இத்திரைப்படத்தில், சாதிய ஒடுக்குமுறைகளுக்கு எதிராகத் தன் குடும்பத்தைப் பாதுகாக்கப் போராடும் சிவசாமி என்ற முதிர்ந்த கதாபாத்திரத்தில் தனுஷ் தனது அசாத்திய நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார்.

நில ஆதிக்க வெறி மற்றும் சாதியப் படிநிலைகளுக்கு எதிராகக் குரல் கொடுக்கும் மூத்த மகன் ஆதிக்க சக்திகளால் கொடூரமாகக் கொல்லப்பட, ஆத்திரமடைந்த இளைய மகன் பழிவாங்க முற்படுகிறான்.

மகனைக் காப்பாற்றவும், நில உரிமையை மீட்டெடுக்கவும் சிவசாமி நடத்தும் உக்கிரமான வேட்டை மற்றும் அவரது கடந்த கால ஆக்ரோஷப் பின்னணி எனப் படம் நெடுகிலும் பரபரப்பான திரைக்கதை அமைக்கப்பட்டிருந்தது.

விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் பாக்ஸ் ஆபிஸை அதிரவைத்த இப்படம், தனுஷிற்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருதையும் பெற்றுத் தந்தது.

காலத்தால் அழியாத வசனம்

கொண்டாடும் ரசிகர்கள் 

சாதிய வன்கொடுமைகளின் கோர முகத்தை வெளிச்சம் போட்டுக் காட்டியதோடு நில்லாமல், கல்வி மட்டுமே ஒரு மனிதனின் வாழ்க்கையையும் சமூகப் படிநிலையையும் புரட்டிப் போடும் ஆற்றல் கொண்டது என்பதை அசுரன் மிக அழுத்தமாகப் பதிவு செய்தது.

குறிப்பாக படத்தின் க்ளைமாக்ஸ் காட்சியில் தன் மகனிடம் தனுஷ் பேசும், "காடு இருந்தா எடுத்துக்குவாங்க, ரூபா இருந்தா பிடுங்கிக்குவாங்க... ஆனா, படிப்பை மட்டும் யாராலும் நம்மகிட்ட இருந்து பறிக்கவே முடியாது சிதம்பரம்" என்ற வரிகள் இன்றும் சமத்துவத்தையும் கல்வி விழிப்புணர்வையும் பேசும் காலத்தால் அழியாத முழக்கமாக ஒலித்துக் கொண்டிருக்கிறது.

7 ஆண்டுகளைக் கடந்த பின்னரும் ரசிகர்களின் இதயங்களில் நீங்காத இடம்பிடித்த இந்த காவியத்தை சமூக வலைதளங்களில் ரசிகர்கள் உற்சாகமாகக் கொண்டாடி வருகின்றனர்.

ADVERTISEMENT