
தமிழகத்தில் அரசு கல்லூரிகளுக்கு 560 கௌரவ விரிவுரையாளர்கள் நியமனம்: உயர்கல்வித்துறை அறிவிப்பு
செய்தி முன்னோட்டம்
தமிழக அரசின் கலை, அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில், தற்காலிக அடிப்படையில் 560 கௌரவ விரிவுரையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி. செழியன் அறிவித்துள்ளார். மாணவர்களின் கல்விக்கு எவ்விதத் தொய்வும் ஏற்படாமல் இருக்க, இந்தப் புதிய ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். நடப்பு 2025-2026 கல்வியாண்டில், தமிழ்நாடு முதலமைச்சரின் உத்தரவின்படி, 15 புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்பட்டன. இது தவிர, மாணவர்களின் தேவைக்கேற்ப பல்வேறு பாடப்பிரிவுகளில் 15,000 க்கும் மேற்பட்ட கூடுதல் இடங்களும் உருவாக்கப்பட்டன. இந்த மாணவர்களுக்குப் பாடம் கற்பிக்க, நிரந்தரப் பேராசிரியர் நியமனம் செய்யப்படும் வரை, தற்காலிக விரிவுரையாளர்களை நியமிக்க முதலமைச்சர் அறிவுறுத்தினார்.
பட்டியல்
தேர்வு செய்யப்பட்டவர்களின் பட்டியலை பார்ப்பது எப்படி?
இதன்படி, கடந்த ஜூலை 21 ஆம் தேதி முதல் இணையதள விண்ணப்பப் பதிவு தொடங்கி, விண்ணப்பங்கள் பெறப்பட்டன. தகுதியான நபர்களுக்கான நேர்காணல்கள் ஆகஸ்ட் 18 முதல் 28 வரை மண்டல அளவில் நடைபெற்றன. நேர்காணலின் முடிவில், தற்காலிக கௌரவ விரிவுரையாளர்களின் தேர்வுப் பட்டியல் இன்று (செப்டம்பர் 1) tngasa.org என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. தேர்ந்தெடுக்கப்பட்ட விரிவுரையாளர்கள், தங்கள் பயனர் குறியீடு மற்றும் கடவுச்சொல் மூலம் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட கல்லூரி விவரங்களைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இவர்கள் அனைவரும் செப்டம்பர் 8 ஆம் தேதிக்குள் உரிய கல்லூரிகளில் பணியில் சேர வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.