தமிழகம் முழுவதும் நடைபயணம்: பாஜக தலைவர் அண்ணாமலை அறிவிப்பு
பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை தனது மாநிலம் தழுவிய பாதயாத்திரையை வரும் 14ஆம் தேதி திருச்செந்தூரில் இருந்து தொடங்குகிறார். இந்த தேதி டாக்டர் பி.ஆர்.அம்பேத்கரின் பிறந்தநாள் என்பது குறிப்பிடத்தக்கது. அவரது ரஃபேல் கைக்கடிகாரத்தின் மீதான சர்ச்சையின் போது இந்த நடைபயணம் அறிவிக்கப்பட்ட நிலையில், இன்று(ஜன:20) கடலூரில் நடந்த தமிழக பாஜக மாநில நிர்வாகிகள் கூட்டத்தில் தேதி உறுதி செய்யப்பட்டுள்ளது. நடைபயணம் தொடங்குவதற்கு முன், அவர் கைக்கடிகாரத்திற்கான ரசீது, அவரது சொந்த நிதி விவரங்கள், திமுக தலைவர்கள் மற்றும் அவர்களின் பினாமிகளின் விவரங்கள் ஆகியவற்றை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவரது கைக்கடிகாரம் குறித்து அண்மையில் சர்ச்சை எழுந்ததால், அதன் உண்மையான விலை குறித்த ரசீதை வெளியிடுவார் என்று கூறப்படுகிறது.
அனைத்து தொகுதிகளிலும் நடைபெறவிருக்கும் பாதயாத்திரை
கடந்த டிசம்பரில், திமுக பினாமி சொத்துக்கள் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் கண்டறிய பாஜக தீவிர ஆய்வு மேற்கொண்டு வருவதாகவும், அதுவரை நடத்தப்பட்ட ஆய்வில் ரூ.2 லட்சம் கோடி சொத்துகள் இருப்பது தெரியவந்ததாகவும் அவர் கூறியிருந்தார். 2024 தேர்தலுக்கு முந்தைய ஓராண்டு காலப்பகுதியில் மாநிலத்தின் அனைத்து தொகுதிகளிலும்(234) இந்த பாதயாத்திரை மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பாஜகவின் கொள்கையை மக்களிடம் கொண்டு சேர்பதற்காகவும் தமிழகத்தில் பாஜகவின் செல்வாக்கை உயர்த்துவதற்காகவும் இந்த பாதயாத்திரை நடத்தப்படுவதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகிறார்கள். இன்று நடைபெற்ற பாஜக மாநில கூட்டத்தில் திமுக தலைமையில் இருக்கும் தமிழக அரசை கண்டித்தும் பாஜக தேசிய தலைவராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜே.பி நட்டாவிற்கு பாராட்டு தெரிவித்தும் ஒன்பது தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.