தமிழக மதுபான கடைகளில் ஸ்வைப்பிங் மெஷின் - டெண்டர் அறிவிப்பு
தமிழ்நாடு மாநிலத்தில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் கடைகளில் அதிக கட்டணத்தினை பெறுவதை தடுக்கும் முயற்சியாக ஸ்வைப்பிங் மெஷின் கொண்டுவரப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. டாஸ்மாக் நிறுவனத்தின் மூலம் அரசு மாதுபானங்களை விற்பனை செய்து வருகிறது. அதன்படி தமிழகம் முழுவதும் 4810 டாஸ்மாக் மதுபான கடைகள் இருப்பதாக கூறப்படும் நிலையில், மது வாங்குவோரிடம் ஒரு பாட்டிலுக்கு ரூ.10 அதிகமாக கட்டணம் வசூலிக்கப்படுகிறது என்னும் குற்றச்சாட்டு அண்மையில் அதிகளவில் முன்வைக்கப்பட்டு வருகிறது. அதுமட்டுமல்லாமல் இவ்வாறு கூடுதலாக வசூலிக்கப்படும் ரூ.10 அமைச்சர் மற்றும் அதிகாரிகளுக்கு கொடுக்கப்படுவதாக டாஸ்மாக் ஊழியர்கள் கூறும் வீடியோ அவ்வப்போது இணையத்தில் வெளியாகிறது.
ஆண்டுதோறும் சுமார் ரூ.40 ஆயிரம் கோடி வருவாய்
இந்நிலையில் இது போன்ற குற்றச்சாட்டுகளை கருத்தில் கொண்டு டாஸ்மாக் கடைகளில் ஸ்வைப்பிங் மெஷின் முறையினை கொண்டு வர டாஸ்மாக் நிறுவனம் முடிவு செய்துள்ளது. இதனை தொடர்ந்து தமிழகத்தில் செயல்பட்டு வரும் 4810 டாஸ்மாக் மதுபான கடைகளிலும் ஸ்வைப்பிங் மெஷின் பண பரிவர்த்தனையினை மேற்கொள்ள வங்கிகளுக்கு அழைப்பு விடுக்கும் விதத்தில் டெண்டர் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு இந்த மதுபான விற்பனையினை டாஸ்மாக் நிறுவனம் மூலம் நடத்தி வரும் நிலையில், இதன் மூலம் அரசு ஆண்டுதோறும் சுமார் ரூ.40 ஆயிரம் கோடி வருவாய் ஈட்டப்படுகிறது என்று கூறப்படுகிறது. இதனிடையே பல்வேறு கட்சிகளும், அமைப்புகளும் டாஸ்மாக் கடைகளை முழுமையாக மூட வலியுறுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.