இந்த அறிகுறிகள் இருந்தா சாதாரண காய்ச்சல்னு விட்ராதீங்க! தமிழகத்தில் 399 பேருக்குப் பன்றிக்காய்ச்சல்; சுகாதாரத்துறை அவசர எச்சரிக்கை
செய்தி முன்னோட்டம்
தமிழகத்தில் பன்றிக்காய்ச்சல் பாதிப்பு அண்மைக்காலமாக வேகமாக அதிகரித்து வருவதால் பொதுமக்கள் அனைவரும் தீவிர முன்னெச்சரிக்கையுடன் இருக்குமாறு சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது. கடந்த ஜனவரி மாதத்தில் வெறும் 19 பேருக்கு மட்டுமே பன்றிக்காய்ச்சல் உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில், தற்போது பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 399 ஆக கணிசமாக உயர்ந்துள்ளது. இதேபோல தலைநகர் டெல்லியிலும் 2,300க்கும் மேற்பட்டோருக்கு பன்றிக்காய்ச்சல் பாதிப்பு கண்டறியப்பட்டு தீவிரக் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.
அறிகுறிகள்
பன்றிக்காய்ச்சலின் முதன்மை அறிகுறிகள் என்னென்ன?
பன்றிக்காய்ச்சல் தொற்றால் பாதிக்கப்படுபவர்களுக்கு வைரஸ் காய்ச்சலின் பொதுவான அறிகுறிகளே தென்படும்.
லேசான காய்ச்சல், தொடர் சளி, இருமல், தொண்டை வலி, உடல் சோர்வு மற்றும் கடுமையான தலைவலி ஆகியவை இதன் முதன்மை அறிகுறிகளாகும்.
சிலருக்கு வயிறு கோளாறுகள், வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்படக்கூடும்.
குறிப்பாகக் குழந்தைகள், முதியவர்கள் மற்றும் ஆஸ்துமா, சர்க்கரை நோய் போன்ற பிற நோய்கள் உள்ளவர்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்படுவது இதன் தீவிர அறிகுறியாகும்.
எச்சரிக்கை
பருவமழைக் காலத்தை முன்னிட்டு சுகாதாரத்துறை எச்சரிக்கை
தமிழகத்தில் விரைவில் வடகிழக்குப் பருவமழைக் காலம் தொடங்க உள்ள நிலையில், காய்ச்சல் பரவல் மேலும் அதிகரிக்கும் அபாயம் உள்ளது.
இதனால் பொதுமக்கள் சுய மருத்துவம் செய்வதைத் தவிர்த்து, லேசான காய்ச்சல் மற்றும் சளி அறிகுறிகள் இருந்தாலும் உடனடியாக அரசு அல்லது தனியார் மருத்துவமனைகளுக்கு சென்று மருத்துவரை அணுக வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நோய்த்தொற்று வீரியமடைவதற்கு முன்பே உரிய சிகிச்சை பெறுவது அவசியமாகும்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கை
பொதுமக்கள் பின்பற்ற வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்
பொது இடங்கள் மற்றும் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதிகளுக்கு செல்லும் போது முகக்கவசம் அணிவது நோய்த்தொற்று பரவலைத் தடுக்கும்.
இருமும் போதும் தும்மும் போதும் கைக்குட்டையால் வாயை மூடிக்கொள்வது, கைகளை அடிக்கடி சோப்பு போட்டுக் கழுவுவது மற்றும் சுடவைத்த குடிநீரைப் பருகுவது மிகவும் நல்லது.
தனிநபர் சுகாதாரத்தைப் பேணுவதன் மூலமும், சுற்றப்புறத்தை சுத்தமாக வைப்பதன் மூலமும் பன்றிக்காய்ச்சல் பரவலை முற்றிலுமாகக் கட்டுப்படுத்த முடியும்.