ஆண் கட்சி ஊழியரை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கு: முன்னாள் எம்.பி. பிரஜ்வல் ரேவண்ணாவின் சகோதரர் கைது
மதச்சார்பற்ற ஜனதா தளம் தலைவர் பிரஜ்வல் ரேவண்ணாவின் மூத்த சகோதரரான சூரஜ் ரேவண்ணா ஒரு ஆண் தொண்டரை பாலியல் பலாத்காரம் செய்தற்காக கைது செய்யப்பட்டுள்ளார். பல பெண்களை அவர் பாலியல் தொந்தரவு செய்ததாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. ஜூன் 16 ஆம் தேதி கர்நாடகாவின் ஹாசன் மாவட்டத்தில் உள்ள பண்ணை வீட்டில் வைத்து ஜே.டி(எஸ்) தலைவர் சூரஜ் ரேவண்ணா தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக 27 வயதான ஆண் கட்சி ஊழியர் ஒருவர் புகார் அளித்துள்ளார். அவர் பதிவு செய்த புகாரின் அடிப்படையில் சூரஜ் ரேவண்ணா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில், ஒரு ஆண் கட்சி ஊழியரை பாலியல் வன்கொடுமை செய்ததற்காக அவர் கைது செய்யப்பட்டார்.
குற்றச்சாட்டை மறுத்துள்ள சூரஜ் ரேவண்ணா
இதற்கிடையில், இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ள சூரஜ் ரேவண்ணா, அவருக்கு ரூ.5 கோடி கொடுக்க மறுத்ததால், அந்த நபர் தனக்கு எதிராக பொய் புகார் அளித்ததாக குற்றம் சாட்டியுள்ளார். சூரஜ் ரேவண்ணாவின் நண்பர் ஷிவ்குமாரும் நேற்று இது குறித்து போலீசில் புகார் அளித்தார். இந்த மாத தொடக்கத்தில் மதச்சார்பற்ற ஜனதாதளம் தொண்டர் தன்னை அணுகி ரூ.5 கோடி கேட்டதாகவும், தனது கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் சூரஜ் ரேவண்ணா மீது பாலியல் வன்கொடுமை வழக்கு பதிவு செய்வேன் என்று மிரட்டியதாகவும் ஷிவ்குமார் தனது புகாரில் கூறியிருந்தார். அந்த நபர் தனக்கு வேலை தேடித் தருமாறு முதலில் தன்னை அணுகியதாக ஷிவ்குமார் கூறியுள்ளார். ஆனால் வேலை கிடைக்காததால் ஷிவ்குமாரையும், சூரஜையும் அவர் பிளாக்மெயில் செய்ய ஆரம்பித்ததாக புகாரில் கூறப்பட்டுள்ளது.