தேர்தல் ஆணையத்திற்கு எதிராக ராகுல் காந்தி தாக்கல் செய்த மனு: உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை
செய்தி முன்னோட்டம்
இந்தியத் தேர்தல் ஆணையத்தின் SIR நடவடிக்கைகளுக்கு எதிராகவும், வாக்காளர்கள் நீக்கம் தொடர்பாகவும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மற்றும் இந்தியா கூட்டணித் தலைவர்கள் தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்கிறது. உச்ச நீதிமன்றத்தின் வழக்குப் பட்டியலில் பதிவேற்றப்பட்டுள்ள விவரங்களின்படி, இம்மனுவானது தலைமை நீதிபதி சூர்யா காந்த் மற்றும் நீதிபதி ஜோய்மால்யா பாக்சி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பாக விசாரணைக்கு வருகிறது.
விவரங்கள்
வழக்கு விவரங்கள்
கடந்த அக்டோபர் 12 அன்று 'இந்தியா' கூட்டணித் தலைவர்களால் பேரணியாக சென்று தாக்கல் செய்யப்பட்ட இந்த மனு, பதிவாளர் அலுவலகத்தின் நடைமுறை சோதனைகளுக்குப் பிறகு அதிகாரப்பூர்வமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
ராகுல் காந்தியுடன் இணைந்து காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவ், என்சிபி தலைவர் சுப்ரியா சுலே மற்றும் சிவசேனா (யுபிடி) தலைவர் சஞ்சய் ராவத் உள்ளிட்ட முன்னணி தலைவர்கள் மனு தாக்கல் செய்துள்ளனர்.
மனு
மனுவில் எழுப்பப்பட்டுள்ள முக்கியக் கோரிக்கைகள்
தேர்தல் ஆணையம் ஜூன் 24, 2025 அன்று எடுத்த முடிவுகள் மற்றும் வாக்காளர் திருத்த நடவடிக்கைகள் அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 324 மற்றும் தேர்தல் ஆணையச் சட்டங்களுக்கு உட்பட்டு எடுக்கப்பட்டதா என நீதிமன்றம் ஆய்வு செய்ய வேண்டும்.
ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையில், தொழில்நுட்ப வல்லுநர்களைக் கொண்டு வாக்காளர் நீக்கங்கள் குறித்துச் சுயாதீன ஆய்வு நடத்த வேண்டும்.
உரிய விசாரணையும், முன்னறிவிப்பும் இன்றி எந்தவொரு வாக்காளரின் பெயரையும் பட்டியலிலிருந்து நீக்கக் கூடாது.
நீக்கப்பட்ட வாக்காளர்களின் விவரங்களை அதற்கான காரணங்களுடன் வாக்குச்சாவடி வாரியாக (Booth-wise) பொதுவெளியில் வெளியிட வேண்டும் என மனுவில் கோரப்பட்டுள்ளது.