ஜம்மு-காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்துக்கு எதிரான மனுக்கள்: உச்ச நீதிமன்றம் இன்று விசாரணை
ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய 370வது சட்டப்பிரிவை ரத்து செய்ததற்கு எதிராக தொடரப்பட்ட மனுக்களை உச்ச நீதிமன்றம் இன்று(ஆகஸ்ட் 2) விசாரிக்கிறது. இந்திய தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு இன்று முதல் இந்த பிரச்சனை குறித்து விசாரிக்கும். தலைமை நீதிபதியை தவிர, நீதிபதிகள் சஞ்சய் கிஷன் கவுல், சஞ்சீவ் கண்ணா, BR கவாய் மற்றும் சூர்யா காந்த் ஆகியோரும் இந்த அமர்வில் அடங்குவர். திங்கள் மற்றும் வெள்ளி கிழமைகளை தவிர மற்ற வார நாட்களில் தொடர்ந்து இந்த மனுக்களின் விசாரணை நடைபெறும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இன்று காலை 10.30 மணிக்கு இதற்கான விசாரணை தொடங்கும்.
'சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டது சட்டவிரோதமானது': உமர் அப்துல்லா
ஆகஸ்ட் 5, 2019முதல் ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய 370வது சட்டப்பிரிவு குடியரசு தலைவரின் உத்தரவின் பேரில் ரத்து செய்யப்பட்டது. அந்த உத்தரவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் இந்த மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து மொத்தம் 23 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்த மனுக்கள் மீதான உச்ச நீதிமன்றத்தின் விசாரணை தொடங்குவதற்கு முன்னதாக, ஜம்மு காஷ்மீரின் தேசிய மாநாட்டு கட்சி(NC) தலைவர் உமர் அப்துல்லா, நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இருப்பதாக கூறினார். "ஆகஸ்ட் 5, 2019அன்று நடந்தது சட்டவிரோதமானது என்பதை நிரூபிக்க முடியும் என்ற நம்பிக்கையுடன் ஜம்மு-காஷ்மீர் மக்கள் சார்பாக நாங்கள் இங்கு வந்துள்ளோம்" என்று டெல்லியில் வைத்து அவர் கூறினார்.