
வக்ஃப் வாரிய சட்டத் திருத்தத்தில் இடைக்கால உத்தரவு குறித்து மே 20இல் பரிசீலனை; உச்ச நீதிமன்றம் அறிவிப்பு
செய்தி முன்னோட்டம்
வியாழக்கிழமை (மே 15) வக்ஃப் வாரிய சட்டத் திருத்தத்தின் அரசியலமைப்பு செல்லுபடியை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை விசாரித்த உச்ச நீதிமன்றம், இந்த விஷயத்தில் இடைக்கால நிவாரணம் வழங்குவது குறித்து மே 20 அன்று பரிசீலிப்பதாக கூறியது.
இந்த வழக்கை முன்னர் விசாரித்த முன்னாள் தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா மே 13இல் பதவி ஓய்வு பெற்றதை அடுத்து, தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் மற்றும் நீதிபதி அகஸ்டின் ஜார்ஜ் மாசி தலைமையிலான அமர்வு, இந்த வழக்கை விசாரித்தது.
மத்திய அரசு சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, நீதிமன்றத்தால் அடையாளம் காணப்பட்ட மூன்று முக்கிய பிரச்சினைகளை நிவர்த்தி செய்யும் வகையில் அரசாங்கம் ஒரு விரிவான பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்துள்ளதாக தெரிவித்தார்.
சர்ச்சை
சர்ச்சைக்குரிய விதிகள் இப்போதைக்கு செயல்படுத்தப்படாது
மத்திய வக்ஃப் கவுன்சில் மற்றும் வக்ஃப் வாரியங்களில் முஸ்லீம் அல்லாதவர்களைச் சேர்ப்பது மற்றும் வக்ஃப் சொத்துக்களை மறு அறிவித்தல் செய்வது தொடர்பான விதிகள் போன்ற சர்ச்சைக்குரிய விதிகள் தற்போதைக்கு செயல்படுத்தப்படாது என்ற தனது முந்தைய உறுதிமொழியை மத்திய அரசு மீண்டும் வலியுறுத்தியது.
முன்னதாக, ஏப்ரல் 17 அன்று, உச்ச நீதிமன்றம் இந்த உத்தரவாதத்தைப் பதிவு செய்து, குறைந்தபட்சம் மே 5 வரை எந்தவொரு அறிவிப்பு நீக்கம் அல்லது நியமனங்களையும் தொடர வேண்டாம் என்று மத்திய அரசைக் கேட்டுக் கொண்டது.
இருப்பினும், இந்தச் சட்டம் உரிய சட்டமியற்றும் செயல்முறையின் மூலம் நிறைவேற்றப்பட்டது என்றும், அரசியலமைப்புச் சட்டத்தை பின்பற்றியே உள்ளது என்பதால், எந்தவொரு இடைக்காலத் தடை விதிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.