தீபாவளிக்கு பட்டாசு வேண்டாம்; விராட் கோலி மூலம் விழிப்புணர்வு மேற்கொள்ள உச்ச நீதிமன்றம் பரிந்துரை
செய்தி முன்னோட்டம்
தீபாவளி பண்டிகையின் போது ஏற்படும் கடுமையான காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்துவது தொடர்பான வழக்கு விசாரணை உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்றது. பட்டாசு இல்லாத மாசற்ற தீபாவளியைக் கொண்டாடுவது குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த கிரிக்கெட் நட்சத்திரம் விராட் கோலி போன்ற பிரபலங்களை பயன்படுத்தலாம் என நீதிபதிகள் யோசனை தெரிவித்தனர். விளையாட்டு வீரர்கள் மூலமாகப் பிரச்சாரங்கள் செய்யும் போது டெல்லி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் மிகப்பெரிய அளவில் விழிப்புணர்வு ஏற்படும் என சுட்டிக்காட்டப்பட்டது. இத்தகைய பிரபலங்களின் கோரிக்கையை மக்கள் எளிதில் ஏற்றுக்கொள்வார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டது.
தீபாவளி பாரம்பரியம்
தீபாவளி பண்டிகையின் மூல பாரம்பரியத்தில் பட்டாசுகள் இல்லை
வழக்கு விசாரணையின் போது நீதிபதிகள் தங்களது பல முக்கிய கருத்துகளைத் தெரிவித்தனர்.
தீபாவளி என்பது அடிப்படையில் ஒளிகளின் பண்டிகையாகும்.
பண்டிகையின் மூல பாரம்பரியத்தில் பட்டாசுகள் இடம்பெறவில்லை என அவர்கள் சுட்டிக்காட்டினர்.
14 மற்றும் 15-ஆம் நூற்றாண்டுகளில் வெடிமருந்து பயன்பாட்டிற்கு வந்த பின்னரே பட்டாசுகள் கொண்டாட்டத்தில் நுழைந்தன.
ஆண்டுதோறும் மாசுபாட்டைக் குறைக்க பிறப்பிக்கப்படும் நீதிமன்ற உத்தரவுகள் வெறும் ஏட்டு சுரைக்காயாக மாறி வருவதாகவும், விதிமீறல்கள் தொடர்ந்து நடைபெறுவது மிகுந்த கவலையளிப்பதாகவும் நீதிபதிகள் வருத்தத்துடன் குறிப்பிட்டனர்.
உடல்நல பாதிப்புகள்
பசுமை பட்டாசுகளின் உண்மைத் தன்மை மற்றும் உடல்நல பாதிப்புகள்
மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தில் சில முக்கிய ஆதாரங்களை முன்வைத்தனர்.
பசுமை பட்டாசுகள் என்ற பெயரில் போலிச் சான்றிதழ்களுடன் ஆபத்தான பட்டாசுகள் சந்தையில் விற்கப்படுகின்றன.
உண்மையான பசுமை பட்டாசுகளும் கூட 30 சதவீதம் வரை மாசுபாட்டை வெளியேற்றுகின்றன.
பட்டாசுகளால் வெளிப்படும் நச்சு வாயுக்கள் மனிதர்களின் ரத்தத்தில் கலந்து கடுமையான நுரையீரல் பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன.
எனவே நாட்டில் முழுமையான ஒழுங்குமுறை அமைப்பு அமலுக்கு வரும் வரை பட்டாசுகளுக்கு முற்றுப்புள்ளியாக தடை விதிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
மாசுக் கட்டுப்பாடு
டெல்லி அரசின் மாசுக்கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் மற்றும் நீதிமன்ற கேள்விகள்
டெல்லி நகரில் நிறுவப்பட்டுள்ள 39 காற்று தரக் கண்காணிப்பு மையங்களில் 9 மையங்கள் மட்டுமே செயல்படுவது குறித்து உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.
இதற்கு டெல்லி அரசு சார்பில் பல தீவிர தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக பதிலளிக்கப்பட்டது.
நவம்பர் 1 முதல் பிஎஸ்-VI வாகனங்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும் எனக் கூறப்பட்டது.
மேலும் 608 நீர் தெளிப்பான் வாகனங்கள் இயக்கப்பட்டு வருவதாக அரசு தெரிவித்தது.
இருப்பினும் பட்டாசு வெடிக்க அனுமதிக்கப்பட்ட நாட்களில் காற்றுத் தரம் மிக மோசமடைந்ததை அரசு ஒப்புக் கொண்டது.