Page Loader
'எஸ்பிஐ வேண்டுமென்றே கீழ்ப்படியாமல் இருக்கிறது': உச்ச நீதிமன்றம் காட்டம்

'எஸ்பிஐ வேண்டுமென்றே கீழ்ப்படியாமல் இருக்கிறது': உச்ச நீதிமன்றம் காட்டம்

எழுதியவர் Sindhuja SM
Mar 11, 2024
01:18 pm

செய்தி முன்னோட்டம்

நன்கொடையாளர்கள் மற்றும் தேர்தல் பத்திரங்களைப் பெறுபவர்கள் பற்றிய விவரங்களை மார்ச் 6-ஆம் தேதிக்குள் வெளியிட வேண்டும் என்ற கடந்த மாத உத்தரவை வேண்டுமென்றே பாரத ஸ்டேட் வங்கி பின்பற்றாமல் இருக்கிறது என்று உச்ச நீதிமன்றம் இன்று கடுமையாக கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும், நாளைக்குள் தகவலை பகிராவிட்டால், அரசு நடத்தும் எஸ்பிஐ வங்கி மீது அவமதிப்பு வழக்கு தொடரப்படும் என்றும் நீதிமன்றம் எச்சரித்துள்ளது. நாளைக்கு தகவலை பகிர்ந்த பிறகு, ஒரு பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்யுமாறு இந்தியாவின் மிக பெரிய வங்கியான எஸ்பிஐக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கூடுதலாக, வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்குள் அனைத்து தேர்தல் பத்திர விவரங்களையும் அதன் இணையதளத்தில் வெளியிடுமாறு இந்திய தேர்தல் ஆணையத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்தியா 

எஸ்பிஐக்கு உச்ச நீதிமன்றம் எச்சரிக்கை 

"இந்த நேரத்தில், நீதிமன்ற அவமதிப்பு அதிகாரத்தை நாங்கள் பயன்படுத்த விரும்பவில்லை என்றாலும், இந்த உத்தரவில் சுட்டிக்காட்டப்பட்ட காலக்கெடுவின்படி வழிகாட்டுதல்களுக்கு இணங்கவில்லை என்றால், வேண்டுமென்றே கீழ்ப்படியாமல் இருப்பதற்காக இந்த நீதிமன்றம் எஸ்பிஐக்கு எதிராக அவமதிப்பு வழக்கு தொடரலாம் என்று எஸ்பிஐக்கு நாங்கள் நோட்டீஸை அனுப்புகிறோம்" என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. தேர்தல் பத்திரங்கள் திட்டம் குறித்த விவரங்களை வெளியிட கூடுதல் அவகாசம் கோரிய பாரத ஸ்டேட் வங்கியின்(எஸ்பிஐ) கோரிக்கையை இன்று நிராகரித்த உச்ச நீதிமன்றம், அந்த விவரங்களை நாளைக்குள் இந்திய தேர்தல் ஆணையத்திடம்(இசிஐ) பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.