
விவாகரத்து செய்வதற்கு இனி 6 மாத கட்டாயக் காத்திருப்பு கிடையாது: உச்ச நீதிமன்றம்
செய்தி முன்னோட்டம்
சட்டப்பிரிவு 142-ன் கீழ் "மீளமுடியாத திருமண முறிவு" என்ற அடிப்படையில் திருமணங்களை கலைக்க முடியும் என்று உச்ச நீதிமன்றம் இன்று(மே 1) கூறியுள்ளது.
பரஸ்பர சம்மதத்தின் மூலம் விவாகரத்து பெறுவதற்கு கொடுக்கப்பட்ட ஆறு மாதங்கள் கட்டாயக் காத்திருப்பு காலத்தை நீக்கிவிடலாம் என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
அதனால், பரஸ்பர சம்மதத்தின் அடிப்படையில் கோரப்படும் விவாகரத்துக்கு முன்பு இருந்த ஆறு மாத கட்டாயக் காத்திருப்பு நிபந்தனைகளுடன் நீக்கப்பட்டுள்ளது.
"திருமணத்தின் மீளமுடியாத முறிவு எப்போது ஏற்படும் என்பதை தீர்மானிக்கக்கூடிய காரணிகளையும் நாங்கள் வகுத்துள்ளோம்" என்று நீதிபதிகள் சஞ்சய் கிஷன் கவுல், சஞ்சீவ் கண்ணா, ஏஎஸ் ஓகா, விக்ரம் நாத் மற்றும் ஜேகே மகேஸ்வரி ஆகியோர் அடங்கிய அரசியல் சாசன அமர்வு கூறியுள்ளது.
details
பராமரிப்பு, ஜீவனாம்சம் மற்றும் குழந்தைகளின் உரிமைகள் சமமாக பிரிக்கப்பட்டது
மேலும், பராமரிப்பு, ஜீவனாம்சம் மற்றும் குழந்தைகளின் உரிமைகள் தொடர்பான பங்கு பிரிவினைகளையும் இந்த அமர்வு சமமாக வகுத்துள்ளது.
142வது சட்டபிரிவின் கீழ் உச்ச நீதிமன்றத்தின் பரந்த அதிகாரங்களைப் பயன்படுத்தி, பரஸ்பர சம்மதத்துடன் விவாகரத்து பெறுவதற்கான கட்டாயக் காத்திருப்பு காலத்தை தள்ளுபடி செய்ய முடியுமா என்ற பிரச்னைக்காகவே இந்த அரசியல் சாசன அமர்வு கூடியது.
எனினும், இந்த விசாரணையின் போது, மீளமுடியாத திருமண முறிவு காரணமாக திருமணங்களை கலைக்க முடியுமா என்ற பிரச்சினையையும் பரிசீலிக்க இந்த அரசியல் சாசன அமர்வு முடிவு செய்தது.
அதன் படி, மீளமுடியாத திருமண முறிவு காரணமாக திருமணங்களை கலைக்க முடியும் என்ற முடிவை நீதிபதிகள் எடுத்துள்ளனர்.