ஒரே பாலின திருமணங்கள்: தீர்ப்பை ஒத்திவைத்தது உச்ச நீதிமன்றம்
ஒரே பாலின திருமணத்தை சட்டப்பூர்வமாக அங்கீகரிக்க கோரி தொடரப்பட்ட மனுக்கள் மீதான தீர்ப்பை உச்ச நீதிமன்றம் இன்று(மே-11) ஒத்திவைத்தது. இந்த வழக்கை 10 நாட்களாக விசாரித்த, தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு இதற்கான தீர்ப்பை ஒத்திவைத்துள்ளது. நீதிபதிகள் எஸ்.கே.கவுல், எஸ்.ஆர்.பாட், ஹிமா கோஹ்லி, பி.எஸ்.நரசிம்ஹா ஆகியோர் அடங்கிய அமர்வு, மனுதாரர்கள் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர்கள் ஏ.எம்.சிங்வி, ராஜுராமச்சந்திரன், கே.வி.விஸ்வநாதன், ஆனந்த் குரோவர், சவுரப் கிர்பால் ஆகியோர் முன்வைத்த மறுசீரமைப்பு வாதங்களை இன்று கேட்டனர். இன்றைய விசாரணையின் போது, மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ராஜூ ராமச்சந்திரன், "ஒரே பாலின திருமணத்திற்கு அங்கீகாரம் வழங்காதது சம உரிமையை மறுப்பதாகும்", என்று வாதிட்டார்.
50க்கும் மேற்பட்ட நாடுகள் ஒரே பாலின தம்பதிகளுக்கு தத்தெடுக்கும் உரிமைகளை வழங்கியுள்ளன
இது குறித்து பேசிய நீதிபதிகள், "நாடாளுமன்றம் எவ்வாறு பதிலளிக்கும் என்பதை எதிர்பார்த்து நீதிமன்றம் ஒரு அறிவிப்பை வழங்க முடியாது." என்று கூறினர். மூத்த வழக்கறிஞர் கீதா லூத்ரா, வெளிநாட்டு திருமணச் சட்டம் குறித்து பேசினார். "வெளிநாட்டில் திருமணம் செய்துகொண்ட தம்பதிகள் இந்தியாவில் இருக்கும்போது அந்நியர்களாக மாற முடியாது." என்று அவர் வாதிட்டார். மூத்த வழக்கறிஞர் மேனகா குருசுவாமி, உலகில் 50க்கும் மேற்பட்ட நாடுகளில் ஒரே பாலின தம்பதிகளை தத்தெடுக்க அனுமதித்துள்ளனர் என்று தெரிவித்தார். "ஒரே பாலின திருமணத்தை அனுமதிக்கும் நாடுகளை விட அவர்களுக்கு தத்தெடுக்கும் உரிமைகளை வழங்கி இருக்கும் நாடுகள் அதிகம்.. இதனால், குழந்தைகளுக்கு எந்தவித பாதகமான பாதிப்பும் இல்லை என்பதை ஆய்வுகள் தெளிவுபடுத்துகின்றன," என்று அவர் விளக்கினார்.