Loading...
உச்ச நீதிமன்றத்தில் ராகுல் காந்திக்கு கண்டனம்: 'யாரும் எங்களை மிரட்ட முடியாது' என தலைமை நீதிபதி சூர்யா காந்த் காட்டம்
ராகுல் காந்திக்கு உச்ச நீதிமன்றம் கண்டனத்தைப் பதிவு செய்துள்ளது.

உச்ச நீதிமன்றத்தில் ராகுல் காந்திக்கு கண்டனம்: 'யாரும் எங்களை மிரட்ட முடியாது' என தலைமை நீதிபதி சூர்யா காந்த் காட்டம்

எழுதியவர் Venkatalakshmi V
Oct 15, 2026
02:36 pm

செய்தி முன்னோட்டம்

இந்தியத் தேர்தல் ஆணையத்தின் வாக்காளர் பட்டியல் SIR-ற்கு எதிராகவும், தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலகக் கோரியும் கடந்த அக்டோபர் 12 அன்று உச்ச நீதிமன்றத்தை நோக்கி பேரணி நடத்தியதற்காக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு உச்ச நீதிமன்றம் கண்டனத்தைப் பதிவு செய்துள்ளது. தலைமை நீதிபதி சூர்யா காந்த் மற்றும் நீதிபதி ஜோய்மால்யா பாக்சி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பாக இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. ராகுல் காந்தியின் இந்த நடவடிக்கை குறித்து அவர் உரிய விளக்கமளிக்க வேண்டும் என தலைமை நீதிபதி சூர்யா காந்த் அமர்வு உத்தரவிட்டுள்ளது.

காட்டம்

"யாரும் எங்களை அச்சுறுத்த முடியாது": தலைமை நீதிபதி காட்டம்

ராகுல் காந்தி சார்பில் மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் ஆஜரான நிலையில், "ராகுல் காந்தி தனது இந்தச் செயலுக்கு கண்டிப்பான விளக்கம் அளிக்க வேண்டும்" என்று தலைமை நீதிபதி கறாராகத் தெரிவித்தார்.

ராகுல் காந்தி, அகிலேஷ் யாதவ், மஹுவா மொய்த்ரா உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக் கோரி வழக்கறிஞர் கௌரவ் பாட்டியா வாதிட்டார்.

200 வழக்கறிஞர்கள் கையெழுத்திட்ட மனுவைக் குறிப்பிட்டு, இது நீதிமன்றத்தின் மீது செல்வாக்குச் செலுத்த முயலும் செயல் என அவர் சுட்டிக்காட்டினார்.

அதற்குப் பதிலளித்த தலைமை நீதிபதி, "யாராலும் உச்ச நீதிமன்றத்தை அச்சுறுத்தவோ அல்லது மிரட்டவோ முடியாது" எனக் காட்டமாகத் தெரிவித்தார்.

நோட்டீஸ்

தேர்தல் ஆணையத்திற்கு நோட்டீஸ்

போராட்டத்தின் போது காவல்துறையினரின் அத்துமீறல்கள், பத்திரிகையாளர்கள் மீதான தாக்குதல்கள் மற்றும் பாதுகாப்பு நடைமுறைகள் தொடர்பான வழக்குகளை விசாரித்த உச்ச நீதிமன்றம், போராட்டம் நடைபெற்ற பகுதிகளின் அனைத்து சிசிடிவி காட்சிப் பதிவுகளையும் சட்ட அமலாக்க முகமைகள் பத்திரமாக பாதுகாத்து நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க உத்தரவிட்டுள்ளது.

அதேவேளையில், வாக்காளர் பட்டியல் திருத்த நடைமுறைகளில் உள்ள வெளிப்படைத்தன்மை மற்றும் தலைமைத் தேர்தல் ஆணையரின் தன்னிச்சையான முடிவுகள் குறித்து 'இந்தியா' கூட்டணித் தலைவர்கள் தாக்கல் செய்த முக்கிய மனு மீது, இந்தியத் தேர்தல் ஆணையம், தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் மற்றும் தேர்தல் ஆணையர்கள் சுக்பீர் சிங் சாந்து, விவேக் ஜோஷி ஆகியோருக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பிப் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது.

ADVERTISEMENT