Loading...
சாலை இருந்தால் நடைபாதையும் இருக்க வேண்டும்! மத்திய அரசுக்கு 2 வார அவகாசம் தந்த உச்ச நீதிமன்றம்
மத்திய அரசுக்கு 2 வார அவகாசம் தந்தது உச்ச நீதிமன்றம்

சாலை இருந்தால் நடைபாதையும் இருக்க வேண்டும்! மத்திய அரசுக்கு 2 வார அவகாசம் தந்த உச்ச நீதிமன்றம்

எழுதியவர் Sekar Chinnappan
Aug 03, 2026
01:29 pm

செய்தி முன்னோட்டம்

இந்தியாவில் சாலைகள் இருக்கும் அனைத்துப் பகுதிகளிலும் பாதசாரிகள் பாதுகாப்பாக நடப்பதற்கு ஏற்ற வகையில் ஆக்கிரமிப்பற்ற தனியான நடைபாதைகளை இரு வாரங்களுக்குள் அமைக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது. நீதிபதிகள் பி.எஸ். நரசிம்மா மற்றும் அலோக் ஆராதே அடங்கிய அமர்வு இந்த முக்கியமான உத்தரவைப் பிறப்பித்துள்ளது. "சாலை என்று ஒன்று இருந்தால், அதில் நிச்சயமாக நடப்பவர்களுக்கான தனிப் பாதையும் இருக்க வேண்டும்" என்று நீதிபதிகள் தங்களது விசாரணையின் போது மிகவும் அழுத்தமாகக் குறிப்பிட்டுள்ளனர்.

பெரிய முதலீடுகள் தேவையில்லை

உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்

நடைபாதைகளை உருவாக்கப் பெரிய அளவிலான கட்டமைப்பு முதலீடுகள் தேவையில்லை என்றும், கயிறுகள் அல்லது எளிய தடுப்புகளைக் கொண்டு உடனடியாக நடைபாதைகளைப் பிரித்து அடையாளம் காண முடியும் என்றும் உச்ச நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.

மோட்டார் வாகனங்கள் தங்களுக்கு எந்தவித அச்சுறுத்தலையும் ஏற்படுத்தாது என்ற நம்பிக்கையுடன் பாதசாரிகள் சுதந்திரமாக நடமாடும் சூழலை அதிகாரிகள் உடனடியாக உருவாக்க வேண்டும்.

மத்திய அரசு சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் கே.எம்.நட்ராஜிடம், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு இரு வாரங்களுக்குள் தகுந்த அறிவுறுத்தல்களை வழங்குமாறு உச்சநீதிமன்ற அமர்வு உத்தரவிட்டுள்ளது.

அடிப்படை உரிமை

நடைபாதை பயன்பாடு என்பது அடிப்படை உரிமை

முன்னதாக கடந்த ஜூன் 19 அன்று வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், சாலையில் பாதுகாப்பாக நடப்பது குடிமக்களின் அடிப்படை உரிமை என்று வரலாற்று சிறப்புமிக்கத் தீர்ப்பை வழங்கியிருந்தது.

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 19(1)(d) வழங்கும் சுதந்திரமாக நடமாடும் உரிமை மற்றும் பிரிவு 21 வழங்கும் வாழ்வுரிமை ஆகியவற்றின் கீழ் நடைபாதை உரிமையும் அடங்கும் என்று நீதிமன்றம் சுட்டிக்காட்டியிருந்தது.

வாகனங்களை விட பாதசாரிகளுக்கே சாலையில் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்றும், இந்த உரிமை மீறப்பட்டால் பொதுமக்கள் இழப்பீடு கோர முடியும் என்றும் நீதிமன்றம் மீண்டும் உறுதிபடத் தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT