நீதிமன்ற வீடியோக்களை சோஷியல் மீடியாவில் பகிர தடை: உச்ச நீதிமன்றம் உத்தரவு
செய்தி முன்னோட்டம்
நீதிமன்ற நடவடிக்கைகளின் ஆடியோ மற்றும் வீடியோ பதிவுகளை உரிய அனுமதியின்றி சமூக வலைத்தளங்களில் பதிவிடுவதற்கும் பகிர்வதற்கும் உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. தலைமை நீதிபதி சூர்யா காந்த் தலைமையிலான அமர்வு பிறப்பித்த இடைக்கால உத்தரவில், சம்பந்தப்பட்ட உயர் நீதிமன்றங்களின் பதிவாளர் ஜெனரல் அல்லது உச்ச நீதிமன்றத்தின் தலைமைச் செயலாளரின் முன் அனுமதி பெறாமல் நீதிமன்ற நடவடிக்கைகளின் பதிவுகளை எடுப்பது, திருத்துவது, சமூக வலைத்தளங்களில் பதிவிடுவது அல்லது அதைப் பயன்படுத்தி பணமாக்குவது முற்றிலும் கூடாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விலக்கு
செய்தி ஊடகங்களுக்கு விலக்கு
நீதிமன்ற வீடியோக்கள் தவறாகப் பயன்படுத்தப்படுவதை தடுக்க தொடரப்பட்ட பொதுநல மனுவை விசாரித்தபோது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இருப்பினும், வழக்கமான செய்தி ஊடகங்களின் செய்தி சேகரிப்பு மற்றும் அறிக்கையிடல் பணிகளுக்கு இந்த உத்தரவால் எந்தவித பாதிப்பும் ஏற்படாது என்றும் உச்ச நீதிமன்றம் தனது உத்தரவில் தெளிவுபடுத்தியுள்ளது.
நீதிமன்ற நேரலை வீடியோக்கள் துண்டாக்கப்பட்டுச் சூழலுக்குப் புறம்பாகப் பரப்பப்படுவதைத் தடுக்க மத்திய அரசு, மாநில அரசுகள் மற்றும் மெட்டா, எக்ஸ் (X) உள்ளிட்ட சமூக வலைத்தள நிறுவனங்கள் பதிலளிக்க உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
மேலும், நேரலை நடவடிக்கைகளை ஒழுங்குபடுத்துவது குறித்த அறிக்கையைச் சமர்ப்பிக்குமாறு அனைத்து உயர் நீதிமன்றங்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.