
வாக்காளர்களுக்கு VVPAT ஸ்லிப் கிடைக்குமா என்று உச்சநீதிமன்றம் கேள்வி: என்ன கூறியது தேர்தல் ஆணையம்?
செய்தி முன்னோட்டம்
சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தலை உறுதி செய்ய பின்பற்றப்பட்ட நடவடிக்கைகள் குறித்து தேர்தல் ஆணையம் விரிவாக விளக்க வேண்டும் என்று இந்திய தேர்தல் ஆணையத்திடம் உச்ச நீதிமன்றம் இன்று கூறியுள்ளது.
"இது ஒரு தேர்தல் செயல்முறை. புனிதம் இருக்க வேண்டும். எதிர்பார்த்த ஒன்று நடக்கவில்லை என்று யாரும் பதறிவிடக்கூடாது" என்று நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா மற்றும் நீதிபதி தீபாங்கர் தத்தா அடங்கிய அமர்வு கூறியது.
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில்(EVM) பதிவான வாக்குகளை VVPAT அமைப்பு மூலம் உருவாக்கப்பட்ட காகிதச் சீட்டுகளைக் கொண்டு குறுக்கு சரிபார்ப்பு செய்ய வேண்டும் என்று கோரிய மனுக்களை நீதிமன்றம் இன்று விசாரித்த போது இதை கூறியது.
தேர்தல் ஆணையம்
VVPAT காகித சீட்டுகள் வாக்காளரின் தனியுரிமையை பாதிக்காதா?
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் வாக்களித்தவுடன், பதிவான வாக்குகளை பிரிண்ட் எடுத்து அதை வாக்காளர்கள் வாக்குப்பெட்டியில் போட அனுமதிக்க வேண்டும் என்று கோரப்பட்டது.
ஆனால், அத்தகைய செயல்முறை வாக்காளரின் தனியுரிமையை பாதிக்காதா என்று நீதிபதி கன்னா கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதிலளித்த மனுதாரர் ஒருவர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் நிஜாம் பாஷா, "வாக்காளரின் தனியுரிமையை எண்ணிக்கொண்டு வாக்காளர்களின் உரிமைகளை நாம் மறுத்துவிடக்கூடாது என்று கூறினார்."
VVPATயில் பிரிண்ட் எடுக்க ஏதேனும் மென்பொருள் உள்ளதா என்று நீதிமன்றம் கேட்டதற்கு, தேர்தல் ஆணையம் எதிர்மறையாக பதிலளித்தது.
"ஒவ்வொரு PATயிலும் சின்னங்களைச் சேமிக்கும் 4 மெகாபைட் ஃபிளாஷ் நினைவகம் மட்டுமே உள்ளது. அதில் எந்த தரவுகளையும் முன்கூட்டியே ஏற்ற முடியாது" என்று தேர்தல் ஆணையம் கூறியது.
தேர்தல்
நியாயமான தேர்தலை உறுதி செய்ய பின்பற்றப்பட்ட நடவடிக்கைகள் குறித்து நீதிமன்றம் கேள்வி
"தேர்தல் நடத்தும் அலுவலர் மின்னணு வாக்குச் சீட்டைத் தயாரித்து, அது சின்னம் ஏற்றும் அலகில் ஏற்றப்படும். அது வரிசை எண், வேட்பாளர் பெயர் மற்றும் சின்னம் ஆகியவற்றைக் கொடுக்கும். எதுவும் முன்பே ஏற்றப்படவில்லை. அது தரவு அல்ல, அது பட வடிவம்." என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
வாக்குப்பதிவுக்காக எத்தனை சின்னம் ஏற்றும் அலகுகள் உருவாக்கப்படுகின்றன என்று நீதிமன்றம் கேட்டதற்கு, தேர்தல்ஆணைய அதிகாரி ஒருவர், "பொதுவாக ஒரு தொகுதியில் ஒன்று. வாக்குப்பதிவு முடியும்வரை அது தேர்தல் நடத்தும் அதிகாரியின் காவலில் இருக்கும்" என்று பதிலளித்தார்.
அப்போது, முறைகேடு நடைபெறாமல் இருக்க அந்த பிரிவுக்கு சீல் வைக்கப்படுமா என நீதிமன்றம் கேட்டதற்கு, அதுபோன்ற எந்த நடைமுறையும் தற்போது இல்லை என்று தேர்தல் ஆணையம் பதிலளித்தது.