பலாத்காரத்தால் கர்ப்பமான பெண்: கருவை கலைக்கூடாது என்று உத்தரவிட்ட நீதிபதியை வெளுத்து வாங்கிய உச்ச நீதிமன்றம்
பாலியல் பலாத்காரத்தால் கர்ப்பமான பெண்ணின் 27 வார கர்ப்பத்தை கலைக்க உச்ச நீதிமன்றம் இன்று அனுமதி அளித்தது. மேலும், "அரசியலமைப்புத் தத்துவத்திற்கு எதிரானது" என்று கூறி பாதிக்கப்பட்ட பெண்ணின் மனுவை நிராகரித்ததற்காக குஜராத் உயர்நீதிமன்றத்தை உச்ச நீதிமன்றம் கடுமையாக சாட்டியுள்ளது. கருக்கலைப்பு மனுவை நீதிபதிகள் பி.வி. நாகரத்னா மற்றும் உஜ்ஜல் புயான் அடங்கிய உச்ச நீதிமன்ற பெஞ்ச் இன்று விசாரித்தது. இதற்கு முன்பாக, பாதிக்கப்பட்ட பெண் குஜராத் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவை ஆகஸ்ட் 17ஆம் தேதி விசாரித்த குஜராத் உயர் நீதிமன்றத்தின் ஒற்றை நீதிபதி, அதை நிராகரித்தார். இதனையடுத்து, பாதிக்கப்பட்ட பெண் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார்.
உச்ச நீதிமன்ற உத்தரவிற்கு எதிராக உத்தரவிட்ட குஜராத் உயர்நீதிமன்றம்
இந்த மனுவின் அவசரத்தை புரிந்து கொண்ட உச்ச நீதிமன்றம், கடந்த சனிக்கிழமையன்று இந்த வழக்கை அவசரமாக விசாரித்தது. அப்போது, மருத்துவ அறிக்கையை சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்ட உச்ச நீதிமன்றம், இந்த வழக்கு விசாரணையை திங்கள்கிழமைக்கு(இன்று) ஒத்தி வைத்தது. இதற்கிடையில், கடந்த சனிக்கிழமை, உச்ச நீதிமன்ற விசாரணைக்கு பிறகு இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் கருக்கலைப்பு மனுவை நிராகரித்து உத்தரவிட்டது. இந்திய அரசியல் அமைப்பு சட்டங்களின் படி, உச்ச நீதிமன்றம் ஒரு வழக்கை எடுத்து விசாரித்து கொண்டிருக்கும் போது உச்ச நீதிமன்றத்திற்கு கீழ் உள்ள எந்த நீதிமன்றங்களும் அந்த வழக்கிற்கு உத்தரவிட முடியாது. அப்படி உத்தரவிட்டாலும் அது செல்லாது. இந்த விஷயம் தெரிந்திருந்தும் குஜராத் உயர்-நீதிமன்றம் கருக்கலைப்பு மனுவை நிராகரித்தது உச்சநீதிமன்றத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது.
'குஜராத் உயர்நீதிமன்றத்தில் என்ன நடக்கிறது?': உச்ச நீதிமன்றம்
இந்த தகவலை உச்ச நீதிமன்றத்திடம் அரசு வழக்கறிஞர் கூறினார். இந்த தகவலை கேட்ட நீதிபதி நாகரத்னா "நீங்கள் இதை ஆதரிக்கிறீர்களா? எங்களின் உத்தரவுக்கு எதிராக உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருப்பது பாராட்டதக்கது இல்லை. எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்ததற்கு நன்றி, ஆனால் நீங்கள் இதை ஆதரிக்கிறீர்களா? குஜராத் உயர்நீதிமன்றத்தில் என்ன நடக்கிறது?" என்று கேள்வி எழுப்பினார். "உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக இந்தியாவில் உள்ள எந்த நீதிமன்றமும் சனிக்கிழமையன்று இதுபோன்ற உத்தரவை பிறப்பிக்க முடியாது." என்று நீதிபதி நாகரத்னா மேலும் கூறினார். "இதுநாங்கள் அளித்த உத்தரவுகளுக்கு முற்றிலும் எதிரானது" நீதிபதி புயான் கூறினார். கருக்கலைப்பு மனுவை நிராகரித்த உயர் நீதிமன்றத்தின் உத்தரவு முன்னுக்குப் பின் முரணானது என்று உச்ச நீதிமன்றம் கூறியது.
'பலாத்காரத்தில் இருந்து தப்பிய ஒருவரை கர்ப்பம் தரிக்க கட்டாயப்படுத்துவது நியாயமா?'
அதனையடுத்து, கருக்கலைப்பு மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், "பலாத்காரத்தில் இருந்து தப்பிய ஒருவரை கர்ப்பம் தரிக்க கட்டாயப்படுத்துவது நியாயமா?" என்று கேள்வி எழுப்பியது. "பாதிக்கப்பட்ட பெண் கர்ப்பத்தை கலைக்கலாம். அவர் நாளை பருச்சில் உள்ள மருத்துவமனையில் ஆஜராக நாங்கள் அனுமதிக்கிறோம்." என்று பலாத்காரத்தால் கர்ப்பமான பெண்ணின் 27 வார கர்ப்பத்தை கலைக்க உச்ச நீதிமன்றம் அனுமதியளித்தது. "பாதிக்கப்பட்ட பெண் மருத்துவமனையில் ஆஜர் ஆகட்டும். அந்த பெண்ணின் கருக்கலைப்புக்கு உயர்நீதிமன்றம் அனுமதி அளிக்காதது சரியல்ல. . எங்களின் பார்வையில், மருத்துவ அறிக்கை இருந்தாலும் உயர் நீதிமன்றத்தின் இந்த நடவடிக்கை சரியானது அல்ல." என்று மேலும் உச்ச நீதிமன்றம் கூறியது.
'ஒரு பெண்ணுக்கு தன் உடலின் மீது முழுமையான அதிகாரம் உள்ளது': உச்ச நீதிமன்றம்
"உயர்நீதிமன்றத்தின் பார்வை முன்னுக்குப் பின் முரணானது. ஆகஸ்ட் 19-ம் தேதி எங்களின் உத்தரவின்படி, மனுதாரர் 27 வார கர்ப்பமாக இருப்பதாக மருத்துவ வாரியம் பதிவு செய்துள்ளது. இந்திய சமூகத்தில், திருமண பந்தத்திற்குள், கர்ப்பமாவது ஒரு ஆதாரமாக இருக்கிறது. தம்பதிகள் மற்றும் சமூகத்திற்கு மகிழ்ச்சி அளிக்கிறது. ஆனால், திருமணத்திற்கு வெளியே, அது ஒரு பெண்ணின் மன ஆரோக்கியத்தை கடுமையாக பாதிக்கிறது. ஒரு பெண்ணுக்கு தன் உடலின் மீது முழுமையான அதிகாரம் உள்ளது என்று இந்த நீதிமன்றம் பல முறை கூறியுள்ளது." என்று உச்ச நீதிமன்றம் மேலும் தெரிவித்துள்ளது.