புர்காவுடன் நடனமாடிய 5 இஸ்லாமிய மாணவர்கள்: சஸ்பெண்ட் செய்த நிர்வாகம்!
கர்நாடக மாநிலத்தில் உள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரி மாணவர்கள் புர்கா போட்டு கொண்டு மேடையில் நடனமாடும் வீடியோ இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது. கர்நாடக மாநிலம் மங்களூர் அருகே உள்ள ஒரு பொறியியல் கல்லூரியில் சங்க தொடக்க விழா ஒன்று நடைபெற்றிருக்கிறது. இந்த விழாவில் திடீரென்று மேடையில் புர்கா அணிந்துகொண்டு ஏறிய சில மாணவர்கள் பாலிவுட் பாடலுக்கு நடனமாடி இருக்கின்றனர். இதை வன்மையாக கண்டித்த நிர்வாகம் அந்த மாணவர்களை இடை நீக்கம் செய்துள்ளது. மேலும், இதைப் பற்றி விளக்கிய கல்லூரி நிர்வாகம் நடனமாடிய மாணவர்கள் இஸ்லாமிய சமூகத்தை சேர்ந்தவர்கள் என்றும் இதற்கு தாங்கள் அனுமதி அளிக்கவில்லை என்றும் விளக்கம் அளித்துள்ளது.
புர்கா சர்ச்சை
இதற்கு உரிய நடவடிக்கைகள் எடுத்த நிர்வாகம் மத ரீதியாக இருக்கும் ஒற்றுமையை சீர்குலைக்கும் செயல்களை என்றுமே தங்கள் கல்லூரி நிர்வாகம் அனுமதிக்காது என்றும் தெரிவித்துள்ளது. ஏற்கனவே, கர்நாடகாவை மையமாக வைத்து எழுந்த புர்கா அணிவது தொடர்பான சர்ச்சையைத் தொடர்ந்து, கல்வி நிலையங்களில் புர்கா அணிய அரசு தடை விதித்திருக்கிறது. இந்நிலையில், மாணவர்கள் செய்த இந்த விளையாட்டுத்தனம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.