குடிநீரில் லித்தியம் அதிகம் இருந்தால் குழந்தைகளுக்கு ஆட்டிசம் ஏற்பட வாய்ப்பிருக்கிறது
கர்ப்பிணி பெண்கள் குடிப்பதற்குப் பயன்படுத்தப்படும் வீட்டுக் குழாய் நீரில் அதிக அளவு லித்தியம் இருந்தால், அது குழந்தையின் நரம்பியல் வளர்ச்சிக்கு தேவையான ஒரு முக்கியமான மூலக்கூறை பாதிக்கலாம் என்கின்றனர் விஞ்ஞானிகள். இது குழந்தைகளுக்கு ஆட்டிசம் ஸ்பெக்ட்ரம் கோளாறு ஏற்படுவதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கும் என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். எதிர்காலத்தில், லித்தியம் பேட்டரியின் பயன்பாடு மற்றும் நிலத்தடி நீர் மாசு போன்ற காரணிகளால் தண்ணீரில் லித்தியம் அளவு அதிகரிக்கக்கூடும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர். அமெரிக்காவின் கலிபோர்னியா லாஸ் ஏஞ்சல்ஸ் பல்கலைக்கழகத்தின்(UCLA) ஹெல்த் விஞ்ஞானிகள், டென்மார்க்கின் தரவுகளின் அடிப்படையில் தங்கள் ஆய்வின் முடிவுகளை வெளியிட்டுள்ளனர். அதனால், இந்த முடிவுகள் பிற இடங்களுக்கும் மக்கள் தொகைக்கும் ஏற்றவாறு மாறுபடும் என்று அவர்கள் கூறியுள்ளனர்.
கர்ப்பிணி பெண்கள் லித்தியம் உட்கொள்வதால் ஏற்படும் பிரச்சனைகள்
ஜர்னல் ஆஃப் அமெரிக்கன் மெடிக்கல் அசோசியேஷன் (JAMA) பீடியாட்ரிக்ஸில் அவர்கள் தங்கள் முடிவுகளை வெளியிட்டுள்ளனர். "வளரும் மனித மூளையை பாதிக்கக்கூடிய எந்தவொரு குடிநீர் மாசுபாடும் தீவிர ஆய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டும்" என்று UCLA ஹெல்த் நரம்பியல் பேராசிரியர் பீட் ரிட்ஸ் கூறியுள்ளார். லித்தியத்தின் கூறுகள் மனதை சமநிலைப்படுத்த உதவுவதால், மனச்சோர்வு மற்றும் பைபோலார் கோளாறுகளுக்கான சிகிச்சையில் லித்தியம் நீண்ட காலமாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால், கர்ப்பிணி பெண்கள் லித்தியம் உட்கொள்வதால் கருச்சிதைவு, இதய கோளாறு, குறைபாடுகளுடன் குழந்தை பிறப்பது போன்ற பிரச்சனைகள் ஏற்படுவதாக ஆதாரங்கள் கூறுகின்றன.