கனமழையை மாநில பேரிடராக அறிவித்தது இமாச்சல்: 5 நாட்களில் 77 பேர் பலி
கனமழையால் ஏற்பட்ட பெரும் சேதத்தை மாநில பேரிடராக இமாச்சல பிரதேச அரசு நேற்று(ஆகஸ்ட் 18) அறிவித்தது. சம்மர் மலைப் பகுதியில் உள்ள சிவன் கோயிலின் இடிபாடுகளில் இருந்து மற்றொரு உடல் நேற்று மாலை கண்டெடுக்கப்பட்டது. இதனையடுத்து, இமாச்சல் மாநிலத்தில் கடந்த 5 நாட்களில் 77 இறப்புகள் பதிவாகியுள்ளன. அந்த சிவன் கோவில் இடிபாடுகளில் இன்னும் நான்கு பேர் புதைக்கப்பட்டிருக்காலம் என அஞ்சப்படுவதாக சிம்லா எஸ்பி சஞ்சீவ் குமார் காந்தி தெரிவித்துள்ளார். இந்த கனமழையால் மனித உயிர் மற்றும் உடமைகளுக்கு ஏற்பட்ட சேதத்தை கருத்தில் கொண்டு இமாச்சல் மாநிலம் முழுவதும் "இயற்கை பேரிடரால் பாதிக்கப்பட்ட பகுதி" என அறிவிக்கப்பட்டுள்ளது. இமாச்சலில் கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் கனமழை பெய்து வருவதால், பல மாவட்டங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது.
இமாச்சலில் உள்ள 600 சாலைகள் இன்னும் மூடப்பட்டுள்ளன
மீட்புப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருவதாகவும், வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உதவ மாநில அரசு முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும் இமாச்சல் முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு தெரிவித்துள்ளார். ஜூன் 24 ஆம் தேதி இமாச்சல் பிரதேசத்தில் பருவமழை தொடங்கியதில் இருந்து, அம்மாநிலத்தில் பெய்யும் கனமழையால் இதுவரை 220 பேர் உயிரிழந்துள்ளனர். 11,637 வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளது. இமாச்சலில் உள்ள 600 சாலைகள் இன்னும் மூடப்பட்டுள்ளன. அவற்றில் 550 சாலைகள் அடுத்த மூன்று நாட்களில் திறக்கப்படும் என்று பொதுப்பணித் துறை(PWD) அமைச்சர் விக்ரமாதித்ய சிங் தெரிவித்துள்ளார். 408 மின்மாற்றிகளும், 149 குடிநீர் அமைப்புகளும் சேதமடைந்துள்ளன. இதற்கிடையில், இமாச்சல் பிரதேசத்தில் இன்னும் கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.