முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் பெயரில் ஒரு நட்சத்திரம்!
முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயின் பிறந்தநாளை முன்னிட்டு, அவரது பெயர் ஒரு நட்சத்திரத்திற்கு சூட்டப்பட்டுள்ளதாக அவுரங்காபாத் பா.ஜ.க. தலைவர் ஷிரிஷ் போரால்கர் தெரிவித்திருக்கிறார். முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயின் பிறந்தநாள் நேற்று(டிச:25) கொண்டாடப்பட்டது. இதை முன்னிட்டு பல்வேறு அரசியல் தலைவர்களும் அவருக்கு மரியாதை செலுத்தினர். மே 16, 1996 -ஜூன் 1, 1996 வரை, பின், மார்ச் 19, 1998-மே 22, 2004 வரை வாஜ்பாய் இந்திய பிரதமராகப் பதவிவகித்தார். இவர், 1977-1979 வரை மொராஜி தேசாய் அமைச்சரவையில் வெளியுறவுதுறை அமைச்சராகவும் பணியாற்றி இருக்கிறார். ஆகஸ்ட் 16,2018 அன்று டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் இவர் காலமானார். 2014ஆம் ஆண்டில் இருந்து இவரது பிறந்தநாள் 'நல்லாட்சி தினமாக' கொண்டாடப்பட்டு வருகிறது.
சூரியனுக்கு மிக அருகில் உள்ள நட்சத்திரம்!
இந்த வருடம், இவரது பிறந்தநாளை முன்னிட்டு சூரியனுக்கு மிக அருகில் உள்ள நட்சத்திரத்திற்கு இவரது பெயர் சூட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பூமியிலிருந்து இந்த நட்சத்திரம் 392.01 ஒளி ஆண்டுகள் தொலைவில் இருக்கிறது. இது குறித்து சர்வதேச விண்வெளி பதிவு சான்றிதழில் குறிப்பிட்டிருப்பதாவது: "14 05 25.3 -60 28 51.9 என்ற ஆய எண்களைக் கொண்ட நட்சத்திரம் டிசம்பர் 25, 2022 அன்று சர்வதேச விண்வெளிப் பதிவேட்டில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நட்சத்திரத்திற்கு 'அடல் பிஹாரி வாஜ்பாய் ஜி' என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. இதன் பதிவு எண் CX16408US"