ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் தேரோட்டம் - பக்தர்கள் பரவசம்
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் மிகப்பிரசித்திப்பெற்ற கோயில் தான் 108 வைணவ திவ்ய தேசங்களுள் ஒன்றான ஆண்டாள் கோயில். இது ஆண்டாள்-பெரியாழ்வார் உள்ளிட்ட இருவர் எழுந்தருளிய ஸ்தலம் என்பதால் கூடுதல் சிறப்பாக கருதப்படுகிறது. அதன்படி இக்கோயிலில் ஆண்டுதோறும் ஆடி மாதத்தில் ஆடிப்பூரம் தேரோட்ட திருவிழா பெருமளவில் விமர்சையாக நடைபெறுவது வழக்கம். இதனையொட்டி கடந்த 14ம்தேதி இந்த தேரோட்ட திருவிழாவானது கொடியேற்றத்துடன் துவங்கப்பட்ட நிலையில், அன்றைய தினம் இரவு ஸ்ரீ ஆண்டாள்-ஸ்ரீ ரெங்கமன்னார் ஆகியோரது பவனி 16 சக்கர வாகனத்தில் அரங்கேறியது. அதன்பின்னர் திருவிழாவின் 5ம் நாளில் 5 கருடசேவையும், 7ம்நாளான 20ம்தேதி சயன சேவையும் நடந்தது என்று செய்திகள் தெரிவிக்கிறது. அதன் தொடர்ச்சியாக 9ம் நாளான இன்று(ஜூலை.,22)திருவிழாவின் உச்சகட்ட நிகழ்வான ஆடிப்பூர தேரோட்டம் நடந்தது.
இன்று காலை 8.50க்கு தேர் வடம் பிடித்து இழுக்கப்பட்டது
ஆடிப்பூரம் என்பது ஆண்டாள் பிறந்த நட்சத்திரமாகும். அன்றைய தினம் நடக்கும் இந்த தேரோட்டத்தில் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தால் தங்கள் வாழ்வில் எல்லா நலன்களையும் பெறலாம் என்றும், திருமணம் ஆகாதோர், குழந்தை இல்லாமல் உள்ள தம்பதிகள் ஆகியோர் இந்த தேரினை வடம் பிடித்து இழுத்தால் நிச்சயம் நல்லது நடக்கும் என்பதும் ஐதீகம். இந்த தேர்திருவிழாவினை காண தமிழகம் மட்டுமல்லாமல் வெளிமாநிலங்களில் இருந்தும் பல்லாயிரக்கணக்கானோர் ஆண்டுதோறும் வருகை தருவது வழக்கம். 96 அடி உயரம் கொண்ட இந்த தேர் இன்று காலை 8.50க்கு இந்த தேர் வடம் பிடித்து இழுக்கப்பட்டது. அப்போது 30க்கும் மேற்பட்டோர் ஒருவர் மீது ஒருவர் கீழே விழுந்ததையடுத்து, அருகில் இருந்த தீயணைப்பு துறையினர் அவர்களை பத்திரமாக மீட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.