பதவியேற்ற பிறகு, முதல்முறையாக இந்தியாவிற்கு வருகை தரும் இலங்கை அதிபர்
இலங்கை அதிபரான ரணில் விக்ரமசிங்கே வரும் 21ம் தேதி அரசு முறை பயணமாக இந்தியாவிற்கு வருகை தரவுள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. இலங்கை நாட்டில் கடந்த 2022ம் ஆண்டு ஜூலை மாதம் நேர்ந்த மக்கள் எழுச்சி காரணமாக அப்போதைய அதிபரான கோத்தபய ராஜபக்சே தனது பதவியினை ராஜினாமா செய்தார். அதனை தொடர்ந்து, ரணில் விக்ரமசிங்கே இலங்கை நாட்டின் அதிபராக பதவியேற்றார். அந்நாட்டின் அதிபராக பதவியேற்று கிட்டத்தட்ட ஒரு ஆண்டு காலம் முடிந்த நிலையில், ரணில் விக்ரமசிங்கே இந்தியாவிற்கு மேற்கொள்ளவுள்ள முதல் பயணம் இது என்பது குறிப்பிடவேண்டியவை. இதன்படி, 2 நாள் பயணமாக இந்தியா வரும் ரணில் பிரதமர் மோடி அவர்களை நேரில் சந்தித்து பேசவுள்ளார் என்று கூறப்படுகிறது.
இந்திய பயணத்திற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளல்
இப்பயணத்தில் ரணில் விக்ரமசிங்கே அவர்களுடன், எரிசக்தித்துறை அமைச்சர் காஞ்சன விஜயசேகரா, வெளியுறவுத்துறை அமைச்சர் அலி சப்ரி, மீன்வளத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உள்ளிட்டோர் உடன் வருகிறார்கள் என்றும் கூறப்படுகிறது. இலங்கை அதிபரின் இந்திய பயணத்திற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ள இந்திய வெளியுறவு செயலாளரான வினய் மோகன் குவாத்ரா, அடுத்தவாரம் கொழும்பு வரவுள்ளார் என்றும் செய்திகள் தெரிவிக்கிறது. இந்த வருகைக்கு முன்னர், இலங்கையில் இந்தியா செயல்படுத்தப்படும் எரிசக்தி, கடலோர பாதுகாப்பு போன்ற திட்டங்களை இறுதி செய்வார் என்று தெரிகிறது. கடந்தாண்டு கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு சிக்கி தவித்த இலங்கை, இந்திய அரசிடம் பலக்கோடி ரூபாய் கடனுதவியினை கேட்டு பெற்றது. தற்போது இலங்கை நாட்டின் பொருளாதார நிலை இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.