சென்னை தி.நகரில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஸ்ரீ பத்மாவதி தாயார் கோயில் கும்பாபிஷேகம்
சென்னை தி.நகரில் ஜி.என்.செட்டி சாலையில் உள்ள பழம்பெரும் நடிகை காஞ்சனா மற்றும் அவரின் குடும்பத்தினருக்கு சொந்தமான 6 கிரவுண்ட் நிலம் தானமாக திருப்பதி தேவஸ்தானத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. அந்த இடத்தில் திருப்பதி தேவஸ்தானம் ரூ.ஃ கோடி ரூபாய் செலவில் பத்மாவதி தாயார் கோயிலினை மிக பிரமாண்டமாக கட்டியுள்ளது. நாட்டிலேயே சென்னையில் தான் முதன் முறையாக பத்மாவதி தாயாருக்கு தனிக்கோயில் கட்டப்பட்டுள்ளது. இந்த கோயில் பணிகள் அனைத்தும் முடிந்த நிலையில் கும்பாபிஷேகத்திற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டது. இதற்கு முன்னதாக திருப்பதியில் வடிக்கப்பட்ட பத்மாவதி தாயார் சிலை, துவார பாலகர்கள் வனமாலி, பலாக்கினி சிலைகள், மூலவிக்ரகங்கள் மற்றும் கலசங்கள் ஆகியவை திருப்பதியில் இருந்து கொண்டுவரப்பட்டுள்ளது. கடந்த 12ம்தேதி இச்சிலைகள் சென்னைக்கு கொண்டுவரப்பட்டு பூஜைகள், ஹோமங்கள் முதலியன செய்யப்பட்டு வந்துள்ளது.
கோயில் கர்ப்பக்கிரகத்தில் பத்மாவதி தயார் சிலை கடந்த 16ம் தேதி பிரதிஷ்டை செய்யப்பட்டது
மூலவர் சிலைகள் நெல்லில் வைத்து தண்ணீர் மற்றும் 2 ஆயிரம் லிட்டர் பால் ஆகியவை கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து கோயில் கர்ப்பக்கிரகத்தில் பத்மாவதி தயார் சிலை கடந்த 16ம் தேதி பிரதிஷ்டை செய்யப்பட்டது என்று கூறப்படுகிறது. அனைத்து பணிகளும் நிறைவடைந்த நிலையில் நேற்று(மார்ச்.,17) அதிகாலை 4 மணி முதல் கும்பாபிஷேக பணிகள் தொடங்கியுள்ளது. 7.35 மணிக்கு மகா கும்பாபிஷேகம் நடந்தது. கோயிலின் விமான கோபுரத்திலும், ராஜகோபுரத்திலும் ஒரே நேரத்தில் புனித நீர் ஊற்றப்பட்டது, 'கோவிந்தா கோவிந்தா' என முழக்கமிட்ட படி கும்பாபிஷேகம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் கும்பாபிஷேகத்தை தரிசனம் செய்த நிலையில், அவர்கள் மீதும் புனித நீர் தெளிக்கப்பட்டது.