வாகன வேக கட்டுப்பாடு வரம்புக்கு இறுதிமுடிவு எடுக்கப்படவில்லை - சென்னை போக்குவரத்துத்துறை
தமிழகத்தில் போக்குவரத்து விதிகள் மீறப்படுவது மற்றும் குற்றச்சம்பவங்களை தடுக்க காவல்துறை தொடர்ந்து நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன்படி, அண்மையில் வாகனங்களுக்கான வேக கட்டுப்பாடு 40கி.மீ.,என்று அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்த வேகத்தினை மீறினால் அபராதம் விதிக்கப்படும் என்றும் கூறப்பட்டது. இதற்கு பெரும் எதிர்ப்புகளும், விமர்சனங்களும் எழுந்த நிலையில், தற்போது இதுகுறித்து போக்குவரத்து காவல்துறை ஓர் விளக்கத்தினை அளித்துள்ளது. அதன்படி, வாகனங்களுக்கான வேக கட்டுப்பாடு வரம்பு குறித்து இன்னும் இறுதி முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை. சோதனை முயற்சிக்காகவே கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. அதனால் எவ்வித அபராதமும் இப்போதைக்கு வசூலிக்கப்படாது என்று கூறப்பட்டுள்ளது.
பொருத்தப்பட்ட கேமராவில் பதிவாகும் தகவல்கள் ஆய்வுக்காக மட்டுமே
மேலும், வெவ்வேறு சாலைகளில், வெவ்வேறு நேரங்களில் வாகனங்களின் வேகம் கணக்கிடப்பட்டு அதன் அடிப்படையிலேயே வேகத்திற்கான கட்டுப்பாடு குறித்த இறுதி முடிவு எடுக்கப்படும். அவ்வாறு இறுதி முடிவு எடுக்கப்படும் வரை, பொருத்தப்பட்ட 10 கேமராக்களில் பதிவாகும் தகவல்கள் அனைத்தும் ஆய்வுக்காக மட்டுமே உபயோகப்படுத்தப்படும் என்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, அதிவேகமாக வாகனங்களை ஓட்டுபவர்களை கட்டுப்படுத்துவது என்பது மிக பெரும் சவாலாக இருக்கும் நிலையில், பகலில் அதிகபட்சமாக 40கிமீ., வேகத்திலும், இரவில் 50கிமீ., வேகத்திலும் செல்லவே இனி அனுமதிக்கப்படும் என்று கடந்த ஜூன் 19ம் தேதி சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் அவர்கள் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.