40 கி.மீ.,வேகத்திற்கு மேல் வாகனம் ஓட்டினால் அபராதம் விதிக்கப்படும் - சங்கர் ஜிவால்
தமிழகத்தில் போக்குவரத்து விதிகள் மீறப்படுவது மற்றும் குற்ற சம்பவங்களை தடுக்க போக்குவரத்து காவல்துறை தொடர்ந்து நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதில் ஒன்றாக கண்காணிப்பு கேமராக்கள் ஆங்காங்கே பொருத்தப்பட்டன. இந்த கேமராக்கள் மூலம் குற்ற செயல்கள் கண்டறியப்படுவதோடு, குற்றவாளிகளும் கைது செய்யப்படுகிறார்கள். இந்நிலையில் சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் இன்று(ஜூன்.,19) செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது, "சென்னையில் போக்குவரத்து நெரிசல் அதிகம் ஏற்படும் இடங்களில் விதிமீறல்கள் நடக்கிறதா என்பது கண்காணிக்கப்படுகிறது. எனினும், இடைப்பட்ட இடங்களிலும் விதிமீறல்கள் நடப்பதாக புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளது. புகார்கள் எழும் அப்பகுதிகளும் தற்போது கண்காணிக்கப்பட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது" என்று தெரிவித்தார்.
தானியங்கி கருவி மூலம் அபராதத்திற்கான சலான்
தொடர்ந்து பேசிய அவர், "அதி வேகமாக வாகனங்களை ஓட்டுபவர்களை கட்டுப்படுத்துவது என்பது மிக பெரும் சவாலாக உள்ளது". "இரவு நேரங்களில் இது போல் அதிவேகமாக வாகனங்கள் இயக்கப்படுவதால் விபத்துகள் ஏற்படுகிறது". "இவ்வாறு ஏற்படும் விபத்துகளை தவிர்க்க ஆங்காங்கே காவல்துறையினர் பணியமர்த்தப்பட்டு அதிவேகமாக வாகனம் ஓட்டுபவரை கண்காணிப்பது என்பது சவாலான விஷயமாகும்". "எனவே பகலில் அதிகபட்சமாக 40கிமீ., வேகத்திலும், இரவில் 50கிமீ.,வேகத்திலும் செல்வதற்கே இனி அனுமதிக்கப்படும்". "இதற்குமேல் வேகமாக செல்லும் வாகனங்களை கண்டறிய 10 இடங்களில் கண்காணிப்பு கருவிகள் சென்னையில் முதல்முறையாக பொருத்தப்பட்டுள்ளது". "மேலும் 20 இடங்களில் பொருத்த பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது". "குறிப்பிட்ட இந்த வேகத்தினைமீறி வாகனத்தினை இயக்கினால், தானியங்கி கருவிமூலம் வாகனஓட்டிகளுக்கு அபராத சலான் செல்லும்" என்று கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.