சிறப்பு TET தேர்வில் தோல்வி அடைந்த ஆசிரியர்களுக்கு SCERT பயிற்சி: வார இறுதியில் நேரடி வகுப்புகள் அறிவிப்பு
செய்தி முன்னோட்டம்
பணியில் உள்ள ஆசிரியர்களுக்காக நடத்தப்பட்ட சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வில் (TET) தேர்ச்சி பெறாதவர்களுக்கு, வரும் டிசம்பர் மாதம் நடைபெறவுள்ள தேர்வை எதிர்கொள்ளும் வகையில் வார இறுதி நாட்களில் நேரடி சிறப்புப் பயிற்சிகள் அளிக்கப்படவுள்ளன. பணியில் உள்ள ஆசிரியர்களுக்காக ஜூலை 4 மற்றும் 5 ஆகிய தேதிகளில் நடத்தப்பட்ட முதலாவது சிறப்பு டெட் தேர்வை சுமார் 2.15 லட்சம் ஆசிரியர்கள் எழுதினர். இணையவழியில் பயிற்சிகள் அளிக்கப்பட்ட போதிலும், இத்தேர்வில் 1.10 லட்சம் ஆசிரியர்கள் தேர்ச்சி பெறவில்லை. இதனையடுத்து, தோல்வியடைந்த ஆசிரியர்களுக்கு நேரடி முறையில் சிறப்புப் பயிற்சிகள் வழங்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் அறிவித்திருந்தார்.
பயிற்சி வகுப்புகள்
வார இறுதியில் நேரடி பயிற்சி வகுப்புகள்
மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் (SCERT) வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, வரும் டிசம்பர் மாதம் நடைபெறவுள்ள சிறப்பு டெட் தேர்வை முன்னிட்டு இந்த நேரிடை பயிற்சி வகுப்புகள் வார இறுதி நாட்களில் நடத்தப்படவுள்ளன.
ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் (DIET) அல்லது மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி (CEO) அலுவலக வளாகங்களில் வகுப்புகள் நடைபெறும்.
மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன விரிவுரையாளர்கள் மற்றும் கல்வியியல் பேராசிரியர்கள் மூலம் பாடங்கள் கற்பிக்கப்படும்.
டெட் தேர்வில் இதுவரை தேர்ச்சி பெறாத ஆசிரியர்கள் இந்த வாய்ப்பை முழுமையாகப் பயன்படுத்தி, திட்டமிட்டு தேர்வுக்குத் தயாராகுமாறு SCERT அறிவுறுத்தியுள்ளது.