விரைவு ரயில்களில் மாற்றுத்திறனாளிகளுக்கான சலுகை அறிவிப்பு
இந்தியாவில் ரயில்களில் தனியாக அல்லது குழந்தையோடு பயணிக்கும் பெண்கள் மற்றும் முதியோருக்கு லோயர் அல்லது மிடில் பெர்த் ஒதுக்கி தரும் சலுகையானது ஏற்கனவே அமலில் உள்ளது. இதனை தொடர்ந்து மாற்றுத்திறனாளிகளுக்கும் இது போன்ற சலுகைகளை அளிக்க வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கைகள் எழுந்தது. அதன்பேரில் மெயில் ரயில்கள் மற்றும் விரைவு ரயில்களில் பயணிக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கு இந்த சலுகையானது இனி அளிக்கப்படும் என்று மத்திய ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பான உத்தரவு கடந்த மார்ச் மாதம் 31ம் தேதி அனைத்து மண்டலங்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது என்பது குறிப்பிடவேண்டியவை.
கட்டண சலுகையும் அளிக்கப்படுவதாக தகவல்
அதன்படி விரைவு ரயில்களில் பயணிக்கும் மாற்றுத்திறனாளிக்கும் அவருடன் பயணிக்கும் ஓர் நபருக்கும் ஸ்லீப்பர் வகுப்புகளில் லோயர் மற்றும் மிடில் பெர்த் வரிசையில் தலா 2 பெர்த்கள் ஒதுக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. அதே போல், மூன்றாம் ஏ.சி. வகுப்பில் 2 பெர்த்கள் ஒதுக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும், 'கரீப் ரத்' ரயில்களில் நான்கு பெர்த்கள் ஒதுக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து மாற்றுத்திறனாளிகளுள் கை, கால்கள் இல்லாதோர், தனிச்சையாக செயல்பட முடியாத மூளை வளர்ச்சி குன்றியோர், கண் பார்வை இழந்தோர், காது கேட்காதோர் ஆகியோருக்கும், அவர்களுடன் வருபவர்களுக்கும் கட்டண சலுகையும் வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.