
சென்னையில் 'நவோனியா' கும்பல் நடமாட்டம் என காவல்துறை எச்சரிக்கை!
செய்தி முன்னோட்டம்
ரயில் மற்றும் பேருந்து நிலையங்கள், சந்தைகள், வணிக வளாகங்கள் போன்ற மக்கள் கூட்டம் அதிகமான பகுதிகளில் பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என ரயில்வே பாதுகாப்புப் படை (RPF), மாநில இரயில்வே காவல்துறை (GRP), மற்றும் உள்ளூர் காவல்துறைகள் சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த எச்சரிக்கைக்கு காரணம், 'நவோனியா கும்பல்' என அழைக்கப்படும் திருடர்கள் குழுவின் அதிகரித்த நடமாட்டம் தான். ஜார்கண்ட் மற்றும் மேற்கு வங்காளத்தை சேர்ந்த இந்த கும்பல், பொதுவாக 2 முதல் 3 பேர்கள் கொண்ட குழுக்களாகப் பிரிந்து, கூட்டம் அதிகமுள்ள இடங்களில் கைக்குட்டை, துணி, செய்தித்தாள் போன்றவற்றை பயன்படுத்தி செல்போன் மற்றும் மதிப்புள்ள பொருட்களை திருடுகின்றது. சில நேரங்களில் சிறுவர்களையும் இந்த குற்றங்களில் பயன்படுத்துவதாக கூறப்படுகிறது.
கைது
மெரினாவில் சுற்றித்திரிந்த திருட்டு கும்பலில் ஒருவர் கைது
சென்னையில் தொடர்ச்சியான திருட்டு சம்பவங்களை அடுத்து, காவல்துறை சிறப்பு படையினை அமைத்து விசாரணை மேற்கொண்டது. இதில் மெரினா கடற்கரையில் சந்தேகத்திற்கிடமான வகையில் சுற்றித்திரிந்த ஒருவரை கைது செய்த போலீசார், பின்னர், ஒரு சிறுவன் உட்பட, அதே கும்பலின் மூன்று உறுப்பினர்களையும் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட நபர்கள் ஜார்கண்ட் மற்றும் மேற்கு வங்காளத்தை சேர்ந்தவர்கள் எனத் தெரியவந்துள்ளது. தற்போது, அவர்கள் தொடர்புடைய பிற உறுப்பினர்கள் யார்? எத்தனை திருட்டுகளில் ஈடுபட்டுள்ளனர்? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கூட்டம் நிறைந்த இடங்களில் செல்போன் மற்றும் பிற மதிப்புள்ள பொருட்களை பாதுகாப்பாக வைத்திருக்கவும். சந்தேகத்திற்கிடமான நபர்களைக் கவனித்தால் உடனடியாக அருகிலுள்ள காவல்துறையினருக்கு தகவல் வழங்கவும் போலீசார் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளனர்.